ஜி.எஸ்.டி.,யால் தொழில் பாதிப்பு! : லோக்சபாவில் காங்., குற்றச்சாட்டு
ஜி.எஸ்.டி.,யால் தொழில் பாதிப்பு! : லோக்சபாவில் காங்., குற்றச்சாட்டு
ADDED : ஆக 01, 2017 09:25 PM
புதுடில்லி: 'பயங்கரவாதத்தை குறைக்கும்; கள்ள நோட்டு ஒழியும் என, அமல்படுத்தப்பட்ட, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, பா.ஜ., செய்த மிகப்பெரிய தவறு' என, காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.
லோக்சபாவில், நேற்று நடந்த பட்ஜெட் துணை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில், காங்கிரசின், கே.சி. வேணுகோபால் பேசியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகள், அச்சிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட கறுப்புப் பணம் குறித்த விபரங்கள் போன்றவற்றை தராமல், மத்திய அரசு மூடி மறைத்து வருகிறது. சரியாக திட்டமிடாமல் கொண்டு வரப்பட்ட, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், மிகவும் மோசமான பொருளாதார சூழல், வேலை வாய்ப்பின்மை போன்றவற்றுக்கு, நாடு தள்ளப்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், கள்ள நோட்டு ஒழியும்; பயங்கரவாதம் குறையும் என, அறிவிக்கப்பட்டது; ஆனால், அதற்கு எதிர்மாறாக நடந்து வருகிறது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, மிகவும்அவசர கதியில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அமல்படுத்தியதால், விவசாயம், உற்பத்தித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
