ADDED : ஆக 02, 2017 10:43 AM

பெங்களூரு : குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக அணி மாறி ஓட்டளிப்பதை தடுப்பதற்காக, குஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் ரிசார்ட் அறைகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கியது :
குஜராத் எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி அவர்களை பெங்களூரு ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்த கர்நாடக மின்துறை அமைச்சர் ஷிவகுமார் மற்றும் அவரது மகோதரரும், எம்.பி.,யுமான சுரேஷ் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா முழுவதிலும் மொத்தம் 39 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஷிவகுமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் அடங்கிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிக்கிக் கொண்ட ஷிவக்குமார் :
மேலும் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் அணி மாறி ஓட்டளிக்காமல் இருப்பதற்காக பெரிய அளவிலான தொகை கை மாறி இருப்பதாக வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பணம் கொடுத்தே எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ஷிவகுமாருக்கு வருமான வரித்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது லஞ்ச விபரம் அடங்கிய டைரி கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்பாக ஷிவகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கர்நாடக அரசுக்கு நெருக்கடி :
இதற்கிடையில் டில்லியில் உள்ள ஷிவகுமாருக்கு சொந்தமான வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இதில் ரூ.5 கோடி அளவிலான கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம் கர்நாடக அரசிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது குஜராத் அரசியல் விவகாரத்தால் சித்தராமைய்யா அரசுக்கு நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
