தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பா.ஜ., - காங்., பரஸ்பர புகாரால் குஜராத் ராஜ்யசபா தேர்தலில் இழுபறி

பா.ஜ., - காங்., பரஸ்பர புகாரால் குஜராத் ராஜ்யசபா தேர்தலில் இழுபறி

பா.ஜ., - காங்., பரஸ்பர புகாரால் குஜராத் ராஜ்யசபா தேர்தலில் இழுபறி


ADDED : ஆக 08, 2017 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2017 10:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: குஜராத்தில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் இரண்டு, எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறி ஓட்டளித்ததுடன், விதிமுறைகளை மீறி, எதிர்க்கட்சியினரிடம் தங்கள் ஓட்டு சீட்டை காட்டியதால், அதை ரத்து செய்ய வேண்டு மென, தேர்தல் கமிஷனில்

காங்கிரஸ் முறையிட்டது. இதை எதிர்த்து, பா.ஜ.,வும் புகார் அளித்துள்ளது. இதனால், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் இழுபறி நிலவுகிறது.

முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள குஜராத்தில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., சார்பில், அதன் தேசியத் தலைவர், அமித் ஷா, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ராஜினாமா : மூன்றாவது இடத்துக்கு, காங்கிரஸ் சார்பில், அந்த கட்சி தலைவர் சோனியாவின் அரசியல் செயலர், அஹமது படேல் நிறுத்தப்பட்டார். இந்நிலையில், மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான, சங்கர்சிங் வகேலா, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

அவரைத் தொடர்ந்து, ஆறு காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்; அதில், பல்வந்த் சிங் ராஜ்புத் உட்பட மூன்று பேர், பா.ஜ.,வில் இணைந்தனர்.இந்தத் தேர்தலில், அஹமது படேல் வெற்றி பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு கவுரவப் பிரச்னையாக இருந்தது. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து, பல்வந்த் சிங் ராஜ்புத்தை, ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பாளராக, அதிரடியாக, பா.ஜ., அறிவித்தது. கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து வெளியேறுவதை தடுக்க, 44 பேரை, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில், காங்கிரஸ் மேலிடம் தங்க வைத்திருந்தது.சட்டசபையின் மொத்தமுள்ள, 182 இடங்களில், ஆளும் பா.ஜ.,வுக்கு, 121 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சமீபத்தில் ராஜினாமா செய்த, காங்கிரசைச் சேர்ந்த ஆறு பேரும் இந்தத் தேர்தலில் ஓட்டளிக்க முடியாது. இதையடுத்து, ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற, ஒருவருக்கு, 45 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. மிகவும் பரபரப்பான

சூழ்நிலையில், ராஜ்யசபா தேர்தல், நேற்று நடந்தது. துவக்கம் முதலே மிகவும் விறுவிறுப்பாக ஓட்டுப் பதிவு நடந்தது. மொத்தமுள்ள, 176 எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டளித்தனர்.

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த, 44 காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள், அங்கிருந்து குஜராத்துக்கு அழைத்து வரப்பட்டு, ஆனந்த் என்ற பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும், ஒரே பஸ்சில் அழைத்து வரப்பட்டனர்.

அணி மாறி ஓட்டு : சட்டசபையில், காங்கிரஸ் கட்சியின் பலம், 57 ஆக இருந்தது. அதில், ஆறு பேர் ராஜினாமா செய்ததால், பலம், 51ஆக குறைந்தது. முன்னாள் முதல்வர், வகேலா தலைமையிலான, ஏழு அதிருப்தியாளர்கள் ஓட்டு, யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு இருந்தது. ''அஹமது படேல் தோல்வியடைவது உறுதி என்பதால், அவருக்கு ஓட்டளிக்கவில்லை,'' என, ஓட்டுப் பதிவுக்குப் பின், வகேலா தெரிவித்தார். இந்நிலையில், சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் போலோபாய் கோஹில், ராகவ்ஜிபால் படேல் ஆகியோர், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்ததாக கூறினர்.

கட்சிகள் படையெடுப்பு : ஓட்டுப் பதிவு முடிந்து, ஓட்டு எண்ணிக்கை மாலை, 5:00 மணிக்கு துவங்கியது. 'கட்சி மாறி ஓட்டளித்த இருவரும், தேர்தல் ஆணைய விதிகளை மீறி, பா.ஜ.,வின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம், தங்கள் ஓட்டுச் சீட்டை காண்பித்தனர். அதனால், அவர்களது ஓட்டு செல்லாது என அறிவிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில், காங்கிரஸ் புகார் கொடுத்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சுர்ஜேவாலா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, பா.ஜ., சார்பிலும் புகார் கொடுக்கப்பட்டது. ''ஓட்டுப் பதிவு முடிந்து விட்டதால், அதை எதிர்க்க முடியாது,'' என, சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறினார். இரு கட்சிகளும் மாறி மாறி, தேர்தல் கமிஷனுக்கு சென்று புகார்கள் அளித்தன. இதனால், ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு, முடிவுகள் அறிவிப்பு தாமதமானது. தேர்தல் ஆணையர்கள், நேற்று இரவு, இதுகுறித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us