ADDED : செப் 03, 2017 02:41 PM

புதுடில்லி: கண்டிப்பான போலீஸ் அதிகாரி என பெயர் பெற்றவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்துள்ளார்.உ.பி., மாநிலம், மீரட் மாவட்டம், பாசவுலி கிராமத்தில், 1955ம் ஆண்டு நவ., 29ம் தேதி பிறந்தவர் சத்யபால் சிங். தற்போது, 61 வயதாகும் சத்யபால் சிங், கல்லூரி படிப்பை முடித்த பிறகு விஞ்ஞானியாக ஆசைப்பட்டார். எனினும், 1980ம் ஆண்டில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மகாராஷ்டிரா கேடர் ஒதுக்கப்பட்டது.
பல விருதுகள் பெற்றவர்
துவக்கத்தில் நாசிக் பகுதியில் உதவி எஸ்.பி.,யாக பணியாற்றினார். பின்னர் புல்தானா மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார். சி.பி.ஐ.,யில் பணியாற்றியுள்ளார். ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசத்தில் நக்சல் பிரச்னைகளுக்கு எதிராக சிறப்பாக பணியாற்றியதற்காக விருது பெற்றுள்ளார்.
மும்பை கமிஷனராகி அசத்தல்
இவர், 1990ம் ஆண்டுகளில் மும்பை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற போது, நிழல் உலக தாதாக்கள் உச்சத்தில் இருந்த காலம். சோட்டா ராஜன், சோட்டா ஷகில், அருண் காவ்லி போன்றோர் தீவிரமாக சட்டவிரோத பணிகளில் ஈடுபட்டு வந்த காலம். மாபியா கும்பல்களும் தலைவிரித்தாடின. அவர்களை சத்யபால் சிங் இரும்பு கரம் கொண்டு அடக்கினார். போலீஸ் அதிகாரிகள் தயா நாயக், பிரதீப் சர்மா, விஜய் சாலஸ்கர் ஆகியோரை கொண்டு பல என்கவுன்டர் சம்பவங்களை நிகழ்த்தினார். இதன் பிறகு தான் மும்பையில் ஓரளவுக்கு அமைதி திரும்பியது. 2014ம் ஆண்டு ஜன., 31ம் தேதி வி.ஆர்.எஸ்., மூலம் பணி ஓய்வு பெற்றார். இதன் பிறகு பா.ஜ., சார்பில் உ.பி.,யில் உள்ள பாக்பாத் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவர் அஜித் சிங், சமாஜ்வாடி கட்சியின் குலாம முகமது ஆகியோரை தோற்கடித்தார். தற்போது மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
