இந்திய பொருளாதாரத்தை சரித்தவர் மோடி: ராகுல் குற்றச்சாட்டு
இந்திய பொருளாதாரத்தை சரித்தவர் மோடி: ராகுல் குற்றச்சாட்டு
ADDED : செப் 25, 2017 03:24 PM

ஆமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பிரசாரத்தை துவக்கி வைப்பதற்காக 3 நாள் பயணமாக காங்., துணைத் தலைவர் ராகுல், இன்று (செப்.,25) குஜராத் சென்றுள்ளார். அங்கு பாட்டியா கிராமத்தில், வேனில் இருந்தபடி தொண்டர்களிடம் ராகுல் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது : இந்திய இளைஞர்கள் உழைக்க விரும்புகிறார்கள். நாட்டை முன்னேற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பை தர பா.ஜ., தவறி விட்டது. பிரதமர் மோடி யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தை சரித்து விட்டார். அவர் கொண்டு வந்த ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அறிமுகத்தால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பா.ஜ.விற்கு மனதில் இரக்கமோ, ஏழைகள் மீது அக்கறையோ இல்லை. ஆனால் பணக்காரர்களுக்காக அனைத்து கதவுகளையும் திறந்து வைத்திருப்பார்கள். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார் பிரதமர்? என்றார்.
துவாரகாவில் இருந்து ஜாம்நகருக்கு திறந்தவெளி ஜீப்பில் சென்று, ஜாம்நகரில் இரவு முழுவதும் தங்க ராகுல் திட்டமிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் சிறிது தூரம் மாட்டு வண்டியில் பயணித்த ராகுல், விவசாயிகளை சந்தித்தார். தொடர்ந்து சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்ட சொகுசு பஸ்சில் ராகுல் பயணம் செய்து வருகிறார். குஜராத் சட்டசபையை கைப்பற்ற ராகுல் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். பட்டேல் இன மக்களின் ஓட்டுக்களை காங்., குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. துவாரகா சென்ற ராகுலை, பட்டேல் இன போராட்ட தலைவர் ஹார்த்திக் படேல் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
