கிங் பிஷர் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தது ஏன்? ராகுலுக்கு பா.ஜ., கேள்வி
கிங் பிஷர் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தது ஏன்? ராகுலுக்கு பா.ஜ., கேள்வி
UPDATED : செப் 13, 2018 05:28 PM
ADDED : செப் 13, 2018 04:16 PM

புதுடில்லி: காங்கிரஸ் ஆட்சியில் கிங்பிஷர் நிறுவனத்திற்கு கடன் கொடுக்கப்பட்டது ஏன் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:பியூஸ் கோயல் கூறுகையில் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தான் மல்லையாவுக்கு கடன் வழங்கப்பட்டன. இதற்காக சட்ட விதிகள் திருத்தப்பட்டன. ராகுலும், மல்லையாவும் தொடர்ந்து பொய் சொல்கின்றனர். தனது குடும்பத்திற்கும் கிங்பிஷர் நிறுவனத்திற்கு உள்ள தொடர்பு குறித்தும், கிங்பிஷர் நிறுவனத்திற்கு ஏன் கடன் கொடுக்கப்பட்டது என்பது குறித்து ராகுல் விளக்க வேண்டும். மல்லையா பணம் திருடி சென்றதன் பின்னணியில், மன்மோகன் சிங்கும், முந்தைய அரசின் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும் பின்னணியில் உள்ளனர். இவ்வாறு கோயல் கூறினார்.
அசவுகரியம்
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: 1947-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை 18 லட்சம் கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டது. ஆனால், 2014 ஐமு கூட்டணி அரசு முடிவடையும்போது, வங்கிகள் வழங்கிய கடன், 52 லட்சம் கோடியாக அதிகரித்தது. அதன் பிறகு வங்கி முறைகளில் வெளிப்படைதன்மை கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு அசவுகரியமாக மாறிவிட்டது.
பார்லிமென்டில் உள்நோக்கத்துடன் மல்லையா பேசிய போது, கடனை திருப்பி செலுத்துவது குறித்து வங்கிகளிடம் பேசுமாறு ஜெட்லி கூறினார். அரைகுறையாக பேசப்பட்ட விஷயத்தை காங்கிரஸ் கட்சி, ஒரு பிரச்னையாக மாற்ற முயற்சி செய்கிறது. ராகுல், லண்டன் சென்று வந்த பின்னர், இந்த பிரச்னை எழுப்பப்பட்டுள்ளதால், மல்லையாவுடன் கூட்டு வைத்து ராகுல் செயல்படுகிறாரோ என சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
யார்
அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், கோவாவில் மல்லையா அளித்த விருந்துகளுக்கு சென்றது யார். வெளிநாட்டில் அவரது விருந்தினராக இருப்பது யார் என்பது குறித்து கண்டறியப்பட வேண்டும். வெளிநாடு தப்பி சென்றவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரை பிரதமர் மோடி இந்தியா கொண்டு வருவார். இவ்வாறு அவர் கூறினார்.
