ADDED : செப் 13, 2018 08:51 PM

வாரணாசி : பிரதமர் நரேந்திர மோடி, தன், 68வது பிறந்தநாளை, வாரணாசியில் கொண்டாடுகிறார்.
வரும், 17ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 68வது பிறந்த நாள். இந்த ஆண்டு, தன் பிறந்த நாளை, தன் சொந்த தொகுதியான, உ.பி., மாநிலம், வாரணாசியில் கொண்டாட, மோடி முடிவு செய்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்துள்ள அறிவுறுத்தல்படி, வாரணாசி மாவட்ட நிர்வாகம், விழா ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பிறந்த நாளன்று, காசி விஸ்வநாதர் கோவிலில், மோடி தரிசனம் செய்கிறார். பின், பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து, சலோ ஜீத்தே ஹெய்ன் என்ற திரைப்படம் பார்க்கிறார். இதையடுத்து, பபத்பூர் - ஷிவ்பூர் நான்கு வழிச் சாலை, சுற்றுச்சாலை மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் சில திட்டங்களை, மோடி துவக்கி வைக்கிறார்.
பிரதமரின் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் குறித்து, உ.பி., முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, யோகி ஆதித்யநாத், மாவட்ட அதிகாரிகளுடன் இன்று(செப்.,13) ஆலோசனை நடத்தினார்.
