ADDED : நவ 14, 2018 10:12 PM
காங்கிரஸ் காட்டும் பிடிவாதம் காரணமாக, பா.ஜ., ஆட்சி நடக்காத மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான மாநாட்டை நடத்தும் திட்டத்தை, ஆம் ஆத்மி கட்சி, காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லி மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், 2015ல், தேசிய அளவிலான மாநாட்டை, ஆம் ஆத்மி நடத்தியது.பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநாடாக அது, நடந்தது. ஆனாலும், பல மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்காததால், இந்த மாநாடு பெரிய அளவில் பேசப்படவில்லை.தற்போது , பா.ஜ.,வுக்கு எதிராக, வரும் பொதுத் தேர்தலில் பிரமாண்டமான கூட்டணியை அமைக்க, எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இந்நிலையில், தங்களுக்கு மீண்டும் ஒரு தேசிய அளவிலான, 'இமேஜை' உருவாக்கும் நோக்கில், மீண்டும், டில்லியில் தேசிய அளவிலான மாநாட்டை நடத்த, ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையில் அமைந்த இம்மாநாட்டை, நவம்பருக்குள் நடத்த, தீவிரமாக ஏற்பாடுகள் துவங்கின. ஆனால், காங்கிரஸ் கட்சி, இந்த மாநாட்டில் பங்கேற்க விருப்பமில்லை என கூறிவிட்டது.தேசிய அளவில், ஆம் ஆத்மிக்கு முக்கியத்துவம் கிடைப்பதை, காங்கிரஸ் விரும்பாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.இதையடுத்து, 'இந்த மாநாட்டை, தற்போதைய சூழ்நிலையில் நடத்த வேண்டாம்; நிலைமைகள் சற்று தெளிவடையும் வரை காத்திருக்கலாம் என கருதி, காலவரையின்றி ஒத்தி வைக்கலாம்' என, ஆம் ஆத்மி முடிவெடுத்துள்ளது.
- நமது டில்லி நிருபர் -
