UPDATED : ஜன 18, 2019 08:36 PM
ADDED : ஜன 18, 2019 03:42 PM

புதுடில்லி: மம்தா வழியில் மாயாவதியும் தன் மருமகனை (தம்பி மகன்) வாரிசாக உருவாக்கி வருகிறார். இது கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அபிசேக் பானர்ஜி
மம்தா பானர்ஜி திருமணம் செய்துகொள்ளவில்லை. திரிணாமுல் காங்கிரசும் அவர் உருவாக்கிய கட்சி. அவருக்கு வாரிசு இல்லாததால், மருமகனான அபிசேக் பானர்ஜியை வாரிசாக்க விரும்பினார். 5 ஆண்டுகளுக்கு முன் முதலில் அவரை எம்.பி.,யாக்கினார். இப்போது கூட அபிசேக்கிற்கு 31 வயது தான் ஆகிறது. ஆனால், கட்சியில் மம்தாவுக்குப் பிறகு சக்தி வாய்ந்தவர் இவர் தான்.
ஆகாஷ் ஆனந்த்
மம்தாவைப் போல மாயாவதியும் திருமணம் செய்துகொள்ளவில்லை. வாரிசு இல்லாததால், எதிர்காலத்தில் கையைவிட்டு கட்சி போய் விடக்கூடாது என நினைத்தார் போலிருக்கிறது. தன் மருமகன் ஆகாஷ் ஆனந்த் என்பவரை வாரிசாக்க முடிவு செய்து விட்டார். இந்த ஆகாஷ் ஆனந்துக்கு 24 வயது தான் ஆகிறது.
கட்சியில் இப்போதைக்கு எந்த பதவியில் இல்லாவிட்டாலும், ஆகாஷ் எங்கு சென்றாலும்
கட்சியினர் அவருக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கி உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் ஷரண்பூர் பேரணியில் முதலில் தலைகாட்டிய ஆகாஷ், அதன் பிறகு மாயாவுடன் அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொள்கிறார்.
யார் இந்த ஆகாஷ்
மாயாவின் தம்பி ஆனந்த் என்பவரின் மகன் தான் இந்த ஆகாஷ். 2017 வரை இந்த ஆனந்த் தான், கட்சியின் துணை தலைவராக இருந்தார். கட்சி தலைவரின் (மாயாவதி) உறவினர்கள் யாருக்கும் கட்சி பதவி தரப்பட மாட்டாது என மாயா அறிவித்தார். இதையடுத்து ஆனந்த், பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போ ஆகாஷ் கதி என்ன என்று கட்சியினர் கேட்கத் துவங்கினர். அதற்கு மாயா அளித்த பதில்: ‛‛ஆகாஷ் கட்சி உறுப்பினர் மட்டுமே. பதவி எதுவும் தரப்பட மாட்டாது'' என்றார். டில்லியில் பள்ளியில் படித்த ஆகாஷ், லண்டனில் எம்.பி.ஏ., படித்தார். 4 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் இருந்து திரும்பிய ஆகாஷ், தந்தையின் வியாபாரத்தில் உதவியாக இருந்துகொண்டு, கட்சியிலும் தலை காட்டுகிறார்.
அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோரை மாயா சந்தித்த போதெல்லாம், ஆகாசும் உடனிருந்தார். கூட்டணி பற்றி, அகிலேசும், மாயாவும் சேர்ந்து சமீபத்தில் அறிவித்தபோதும், ஆகாஷ் உடனிருந்தார்.
இதையெல்லாம் வைத்து தான், மாயாவின் வாரிசு ஆகாஷ் என பத்திரிகைகள் எழுதத் துவங்கின. ஆனால் இதை மாயா மறுத்துள்ளார். ‛‛ஆகாசை கட்சியில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ளச் சொல்லி இருக்கிறேன். ஆகாசின் தந்தை ஆனந்த், கட்சிக்காக நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார்'' என்றாரே பார்க்கலாம்.
இது பற்றி பகுஜன் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறும்போது, ‛‛கட்சியின் கொள்கைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. சொந்தங்களும் உறவுகளும் கட்சிக்குள் நுழைந்துவிட்டன. கட்சியை உருவாக்கிய கன்சிராம் இருந்தவரை, உறவினர்களை உள்ளேயே விட்டதில்லை'' என்று புலம்புகின்றனர்.
பாவம், இவர்களால் புலம்பத் தானே முடியும்....
