UPDATED : ஜன 21, 2019 12:34 PM
ADDED : ஜன 21, 2019 12:26 PM

புதுடில்லி : பா.ஜ., தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு மேற்குவங்க அரசு அனுமதி மறுத்து வரும் விவகாரம் தொடர்பாக பா.ஜ., - மம்தா தலைமையிலான மேற்குவங்க அரசு இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
சமீபத்தில் மேற்குவங்கத்திங் பா.ஜ., ரத யாத்திரை நடத்தவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் மேற்குவங்க அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பா.ஜ., சில நிபந்தனைகளுடன் அனுமதி பெற்று ரதயாத்திரையை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பான பதற்றம் தணிவதற்குள் அடுத்த பிரச்னையை துவக்கி உள்ளது மம்தா அரசு.
அனுமதி மறுப்பு:
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, உடல்நிலை தேறியதை அடுத்து நாளை (ஜன.,22) மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக அமித்ஷா செல்லும் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்குவங்க அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாளை எங்களின் தேசிய தலைவர் அமித்ஷா பிரசாரத்திற்காக மேற்குவங்கம் செல்ல உள்ளார். ஆனால் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விமானநிலைய விரிவாக்க பணிகள் நடப்பதாகவும், அதற்கான கட்டுமான பொருட்கள் உள்ளதாலும் அனுமதிக்க முடியாது என கூறப்படுகிறது. ஆனால் அதே ஹெலிபேடில் சில நாட்களுக்கு முன் மம்தாவின் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி சுத்தமாகவும், நல்லநிலையில் இருப்பதற்கும் சில பத்திரிக்கையாளர்கள் எடுத்த புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ஹெலிகாப்டர்களைஅ அங்கு தரையிறக்க முடியும். அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பொய்யான தகவல்கள் அடிப்படையில் அமித்ஷாவிற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
