UPDATED : மே 24, 2019 06:11 PM
ADDED : மே 24, 2019 03:43 PM

புதுடில்லி: கடும் தேர்தல் பிரசாரம், நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம், பரபரப்பான ஓட்டு எண்ணிக்கை என எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது பிரதமர் மோடிக்காக சில அவசர பணிகள் காத்திருக்கின்றன.
பிளவுகள் இணைப்பு
தே.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களால் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டாலும், அவர் நாடு முழுமைக்குமே பிரதமர். கட்சிகள், சமுதாயங்கள், நாட்டின் பகுதிகள் என இந்த தேர்தல் பிளவுகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த மூன்றையும் மோடி ஒரே மாதிரி கையாள வேண்டும். அதற்கு அவர், அனைத்து எதிர்க்கட்சிகளையும் அவர் நெருங்க வேண்டும்; பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்; கடந்த காலங்களில் பேசியவை, செய்தவற்றை மறந்து விட வேண்டும்; அனைத்து தரப்பு மக்களிடமும் அணுக்கமாக இருக்க வேண்டும். தே.ஜ.,வுக்கு ஆதரவாக எவ்வளவோ மக்கள் ஓட்டளித்திருந்தாலும், இன்னமும் முஸ்லிம்கள் விலகியே இருக்கிறார்கள் என்பதை தேர்தல் காட்டுகிறது. ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பதால் சிறுபார்மையினருக்கு எதிராக சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது.நாட்டின் வடக்கு, தெற்கு (கர்நாடகா தவிர) என ஓட்டளித்த விதத்திலும் பிரிவு ஏற்பட்டுள்ளது. தெற்கில் அமைப்பு ரீதியாக பா.ஜ., பலவீனமாக இருப்பது காரணமாக இருக்கலாம். மோடியும் அவரது கட்சியும் வெளிப்படுத்தும் கொள்கைகள், தென்னிந்தியர்களை சரியாக போய் சேரவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். தென்னிந்தியவர்களின் தனித்துவமான மொழி, கலாசாரம், வளர்ச்சி போன்றவற்றை புரிந்துகொண்டு இந்த பிளவை ஒட்ட வைத்து சரி செய்ய வேண்டும். தேர்தலுக்காக பிளவை பயன்படுத்தலாம். ஆனால், ஒற்றுமையின் அடிப்படையில் நிர்வாகம் இருக்க வேண்டும். மோடியின் முதல் பணியே நாட்டை ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும்.
அமைச்சரவைக்கு அதிகாரம்
மோடி மீதான இன்னொரு குற்றச்சாட்டு, திறமையில்லாத அமைச்சர்களை வைத்துள்ளார்; அனைத்து அதிகாரங்களையும் தானே வைத்துக்கொண்டார் என்பவையே அவை. இதை அவர் மாற்ற வேண்டும்.கட்சியின் அடிப்படையில் அல்லாமல், திறமை அடிப்படையில் அமைச்சர்களை தேர்வு செய்ய வேண்டும். அதை செய்யக் கூடிய சக்தி அவருக்கு உள்ளது. துறை வல்லுனர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். தொழில் ரீதியானவர்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும். துறை பற்றிய அறிவு இருப்பவர்களை சேர்த்தால், தவறுகள் நேராது. அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.அதற்காக அனைத்து அமைச்சர்களுக்கும் அதிகாரம் தரப்படவில்லை என்றும் கூற முடியாது. உஜ்வாலா திட்டத்தை திறமையாக செயல்படுத்திய தர்மேந்திர பிரதான், மின் மற்றும் ரயில்வேதுறை பியூஸ் கோயல் ஆகியோருக்கு அவர் அதிகாரங்களை அளித்திருந்தார். அதிகாரம் அளித்தால், ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் பிரதமர் அலுவலகத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கத் தேவையில்லை.
உலக நாடுகள்
இம்முறை தேர்தலில் வெளிநாட்டு கொள்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் அது இரண்டு கட்டங்களில் நடந்தது. வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி உள்ளார் என்று மோடிக்கு ஓட்டளித்தவர்கள் கருதினர். பாகிஸ்தனில் இருந்து வரும் பயங்கரவாதிகளுக்கு பதிலுக்கு பதில் அடி கொடுத்தார் மோடி என்றும் கருதினர். ஆனால், வெளியுறவு கொள்கையில் மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட காத்திருக்கின்றன. பாகிஸ்தான் விஷயத்தில் ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சார்க் நாடுகள் அமைப்புக்கு உயிர் கொடுக்க வேண்டும். வங்காள விரிகுடா பல்துறை தொழில் மற்றும் பொருளாதார கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஈரான் - அமெரிக்க பதட்டத்தை சமாளிக்க வேண்டும்; சீனாவுடன் அடிக்கடி ஏற்படும் உரசல்கள், அமெரிக்காவுடன் ஏற்படும் பொருளாதார கருத்து வேறுபாடுகளை சரி செய்ய வேண்டும்.
காஷ்மீர்
காஷ்மீர் பிரச்னை இன்னமும் கொந்தளித்தபடியே இருக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35ஏ மற்றும் 370 சட்டப்பிரிவுகளின் கதி என்ன காஷ்மீர் மக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இது பற்றியும் முக்கிய முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதை மிகவும் கவனமுடன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காஷ்மீரில் பயங்கரவாதமும் பதட்டமும் அதிகரிக்கும்.காஷ்மீரில் அரசை கவர்னரே நீண்ட காலத்துக்கு நடத்த முடியாது. விரைவில் தேர்தல் நடத்தி சட்டபூர்வ அரசை ஏற்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் அதே வேளையில் மக்களின் மனங்களை கவர வேண்டும். காஷ்மீர் மக்களின் குரலை மதித்து, அமைதி ஏற்படுத்த வேண்டும்.
பொருளாதாரம்
பொருளாதார துறையில் கவனம் செலுத்த வேண்டும். நமது பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தாலும், கொஞ்சம் மந்தநிலைமையில் இருக்கிறது என்று தொழில் அதிபர்களும், பொருளாதார நிபுணர்களும் கருதுகின்றனர். எதிர்காலத்தில் ஏதாவது நெருக்கடி ஏற்படலாம் என்று கூட கருதுகின்றனர்.மக்களின் நுகர்வு குறைந்திருக்கிறது; கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் குறைந்திருக்கிறது; திவால் சட்டத்திற்குப் பிறகும் வாரா வங்கிக் கடன் பிரச்னைகள் இருக்கின்றன. மேக் இன் இந்தியா திட்டம் பெரிய அளவில் வளராமல், உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருக்கிறது. இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கவில்லை. விவசாயிகளின் வருவாய் உயரவில்லை.2022க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்ற மோடியின் திட்டம் நிறைவேறுமா என தெரியவில்லை. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிறு தொழில்கள் இன்னும் மீளவில்லை.இந்தியாவின் அளவுக்கும் மக்கள் தொகைக்கும் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இவற்றை எல்லாம் சரி செய்ய தனது முழு பலத்தையும் மோடி காட்ட வேண்டும்.மோடிக்கு உள்ள புகழின் அளவுக்கு வெகு சில பிரதமர்களுக்கே கிடைக்கும். இதை பயன்படுத்தி, தன் மீது நம்பிக்கை வைத்து பிரதமராக தேர்வு செய்த மக்களுக்கு அவர் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க வேண்டும்.
