UPDATED : ஜூலை 13, 2019 04:45 PM
ADDED : ஜூலை 13, 2019 04:43 PM
சென்னை : சென்னை ஐகோர்ட் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் இன்று (ஜூலை13) நடைபெற்றது.இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமாணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சதாசிவம், எஸ்.ஏ.பாப்டே, தஹில்ரமாணி ஆகிய 3 நீதிபதிகளுக்கு மாண்பமை சட்டவியல் முனைவர் பட்டத்தை ஜனாதிபதி வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், '', தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட ஐகோர்ட் நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஆலோசனையை கடந்த 2017ஆம் ஆண்டு முன்வைத்தேன்.இந்த ஆலோசனையை சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில ஜகோர்ட்களில் செயல்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.
தீர்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட நகல்கள், கேரள ஐகோர்ட்டில் மலையாளத்திலும், சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்புகளை தமிழிலும் கிடைக்கச் செய்யலாம். வாய்தா எனும் சட்டக்கருவி அவசர கால பயன்பாட்டிற்குப் பதிலாக, வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது.
ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி ஒரே மாதிரியாக சட்டத்தை அணுக முடியவில்லை என்றால், அது குடியரசு முறையையே பரிகசிப்பதாக ஆகிவிடும்,'' என்றார்.
