ADDED : ஜூலை 07, 2021 01:47 AM
பிண்ட்,:போலீஸ்காரர் வீட்டில் திருடியவர் தன்னை மன்னிக்கும்படி கேட்டு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பிண்ட் பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரிகிறார். அவரது குடும்பத்தினர் பிண்ட் பகுதியில் வசிக்கின்றனர். போலீஸ்காரரின் மனைவியும் குழந்தைகளும் சமீபத்தில் வெளியூர் சென்றிருந்தனர்.
திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பீரோவுக்குள் ஒரு கடிதம் இருப்பதை பார்த்தனர். அதில் 'என் நண்பரின் உயிரை காப்பாற்றுவதற்காக தான் உங்கள் வீட்டில் திருடினேன். என்னை மன்னித்து விடுங்கள்.
திருடிய பொருட்களை விரைவில் திருப்பி கொடுப்பேன்' என எழுதப்பட்டிருந்தது.இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
