UPDATED : அக் 21, 2022 12:37 AM
ADDED : அக் 21, 2022 12:35 AM

புதுடில்லி :இந்தியாவில் மிகப் பெரும் அளவில் நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியலில், 'விப்ரோ' நிறுவனர் அசிம் பிரேம்ஜியை பின்னுக்கு தள்ளி, முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார், எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார்.
'ஹுருன் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ள, 'எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2022' எனும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
![]() |
* ஷிவ் நாடார் 1,161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருப்பதை அடுத்து, முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நாள் ஒன்றுக்கு, சராசரியாக 3 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்துஉள்ளார்
* அசிம் பிரேம்ஜி 484 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் இடம் வகித்து வந்த இவர், தற்போது இரண்டாவது இடத்துக்கு இறங்கி உள்ளார்
* நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான கவுதம் அதானி, ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் 190 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார்
* நாட்டில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை கொடுத்தவர்கள் எண்ணிக்கை 15. மேலும், 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 20 பேரும், 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 43 பேரும் நன்கொடை வழங்கி உள்ளனர்
* கடந்த ஐந்து ஆண்டு களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வழங்குபவர்கள் எண்ணிக்கை, இரண்டிலிருந்து 15 ஆக உயர்ந்து உள்ளது
* மிக இள வயது நன்கொடையாளராக பட்டியலில் இடம்பெற்றுள்ளார், 'ஜீரோதா' நிறுவனத்தின் நிஹில் காமத். 36 வயதாகும் இவர், 100 கோடி ரூபாய்க்கும் மேல் நன்கொடை கொடுத்துள்ளார்.
* இந்த ஆண்டில் புதிதாக 19 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 832 கோடி ரூபாயை வழங்கி உள்ளனர்
* இம்முறை மொத்தம் ஆறு பெண் நன்கொடையாளர்கள், பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
* ரோஹினி நிலேகனி 120 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, பெண்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.