ADDED : ஏப் 01, 2025 12:49 AM

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் தனிச்செயலராக ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வெளியுறவுத் துறை பெண் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014 பேட்ச் ஐ.எப்.எஸ்., அதிகாரியான நிதி திவாரி, 2022 முதல் பிரதமர் அலுவலகத்தில் துணைச்செயலராக பணியாற்றி வருகிறார். தற்போது இவரை, பிரதமரின் தனிச்செயலராக நியமிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசி அருகே உள்ள மெஹமுர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நிதி திவாரி. வணிக வரித்துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வந்தார். கடந்த 2013ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்வானார்; 2014ல் ஐ.எப்.எஸ்., பயிற்சியின்போது சிறந்த பயிற்சி அதிகாரிக்கான விருதையும் நிதி திவாரி பெற்றார்.
முன்னதாக வெளியுறவு அமைச்சகத்தின் சர்வதேச பாதுகாப்பு விவகார பிரிவின் துணைச்செயலராக நிதி திவாரி பணியாற்றிய போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கீழ் செயல்பட்டு வந்தார்.
பிரதமர் மோடிக்கு, தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதீஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு தனிச்செயலர்கள் உள்ள நிலையில், நிதி திவாரியும் தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.