போதை விற்ற நைஜீரிய தம்பதி கைது ரூ.1.50 கோடி பொருள் மீட்பு
போதை விற்ற நைஜீரிய தம்பதி கைது ரூ.1.50 கோடி பொருள் மீட்பு
ADDED : செப் 24, 2024 07:31 AM

பெங்களூரு: பெங்களூரில் போதைப்பொருள் விற்று வந்த வெளிநாட்டு பிரஜை உட்பட இருவரை சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் போதைப்பொருள் விற்று வந்த, நைஜீரியாவைச் நேர்ந்த சுகுத்வேம் ஜஸ்டீஸ் இன்வாபார் என்பவரை, நடப்பாண்டு ஜூலை 24ல் சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து, 4 கிலோ எம்.டி.எம்.ஏ., கிறிஸ்டல் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் இவருக்கு நைஜீரியாவை சேர்ந்த மைக்கேல் டைக், 42, என்பவர் போதைப்பொருள் சப்ளை செய்தது தெரிந்தது. விசாரணை நடத்திய சி.சி.பி., போலீசார், பாலாஜி லே - அவுட்டில் வசிக்கும் மைக்கேல் டைக் வீட்டில், நேற்று அதிகாலை சோதனை நடத்தினர். 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள், மூன்று மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சில ஆண்டுகளாக, பெங்களூரின் கே.ஆர்., புரத்தில் வசித்த மைக்கேலுக்கு, பக்கத்து வீட்டில் வசித்த சஹானா, 25, என்ற பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பின் இருவரும் பரஸ்பரம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் பெங்களூரு ரூரல், யரப்பனஹள்ளியின் பாலாஜி லே - அவுட்டில் வசித்தனர்.
இருவரும் போதைப்பொருள் விற்று வந்தது விசாரணையில் தெரிந்தது. இருவர் மீதும், சி.சி.பி., போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.