ADDED : டிச 18, 2024 10:39 PM

மங்களூரு; போதைப் பொருள் விற்பனை செய்த மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த ஒருவரை, மங்களூரு சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு நகரில் போதைப் பொருள் விற்று வந்த ஷா நவாஸ், முகமது அஷ்பக் ஆகியோரை கடந்த 4ம் தேதி, மங்களூரு சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த மைக்கேல் ஒகாபர் ஒடிக்போ, 44, என்பவரிடம் போதைப் பொருளை வாங்கி விற்பனை செய்தது தெரிந்தது. அவரது நடவடிக்கைகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் வடக்கு கோவாவின் கலன்கூட் என்ற இடத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்த, மைக்கேல் ஒகாபர் ஒடிக்போ நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 30 கிராம் கோகைன், ஒரு கார், இரண்டு மொபைல் போன்கள், 5,000 ரூபாய் ரொக்கம், எடை இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 11.25 லட்சம் ரூபாய்.
கடந்த 2012ல் தொழில் விசாவில் இந்தியா வந்த மைக்கேல் ஒகாபர் ஒடிக்போ, மும்பையில் வசித்தார். பின், கோவாவில் குடியேறி போதைப் பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். அவர் மீது கோவாவில் மூன்று வழக்குகள் உள்ளன. அவரை மங்களூரு அழைத்து வந்து போலீசார் விசாரிக்கின்றனர்.