ADDED : நவ 01, 2024 06:59 AM
ராம்நகர்: தேர்தல் பிரசாரத்தின்போது சென்னப்பட்டணா ம.ஜ.த., வேட்பாளர் நிகில் கண்ணீர் விட்டு அழுதார்.
ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிடும் நிகில், கண்ணமங்கலம் என்ற கிராமத்தில் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது இதற்கு முன்பு போட்டியிட்ட இரண்டு தேர்தலிலும் தோல்வி அடைந்ததை நினைத்து கண்ணீர் விட்டார். அவரை கட்சித் தொண்டர்கள் ஆறுதல்படுத்தினர்.
பின், நிகில் பேசியதாவது:
பிரசாரத்தின்போது கண்ணீர் விடக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் எனக்கும் வலி அதிகமாக உள்ளது. எவ்வளவோ முயற்சித்தும் என்னால் இரண்டு தேர்தலில் அடைந்த தோல்வியின் வழியை தாங்க முடியவில்லை.
எனக்கு மக்கள் அதிக ஓட்டுப் போட்டாலும், அரசியல் சதியால் நான் தோற்றுப் போனேன். மிகுந்த வேதனையில் உள்ளேன். சென்னப்பட்டணாவில் கட்சி தொண்டர்களை பாதுகாக்கவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். தயவுசெய்து என்னை இந்த முறை கைவிட்டு விடாதீர்கள்.
மாநில கட்சியை உருவாக்குவது மிகவும் கடினம். விவசாயிகள் நலனில் அக்கறை காட்டியவர் தேவகவுடா. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் குமாரசாமி.
லோக்சபா தேர்தலுக்குப் பின் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தி வருகிறேன். எனக்கு மக்கள்தான் ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

