ADDED : பிப் 20, 2024 06:36 AM

ராம்நகர்: ''தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க, டில்லிக்கு வரும்படி பா.ஜ., தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நானும் செல்கிறேன்,'' என, மாநில ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் தெரிவித்தார்.
ராம்நகரில் அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., தலைவர்களுடன் நடக்கும் பேச்சுக்கு பின், 28 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தலை முன்னிட்டு, பழைய மைசூரு பகுதியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து, கூட்டம் நடத்தி உள்ளேன்.
விரைவில் அப்பகுதியின் அனைத்து தாலுகாக்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு வியூகம் வகித்து வருகிறோம்.
மாண்டியாவில் நான் போட்டியிட வேண்டும் என்று அம்மாவட்ட தலைவர்கள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த தேர்தலில் இத்தொகுதி வாக்காளர்கள், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் அளித்துள்ளனர். அவர்களுக்கு, நான் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசிப்போம். நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க போராட வேண்டும். மாநிலத்தின் 28 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களை வென்று, மோடிக்கு பரிசாக வழங்குவோம்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க டில்லிக்கு வரும்படி பா.ஜ., தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்; நானும் செல்கிறேன்.
பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளர் ரங்கநாத் வெற்றிக்காக, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அனைத்து ஆசிரியர்களின் ஆசிர்வாதமும், ரங்கநாத்துக்கு உண்டு.
இவ்வாறு அவர்கூறினார்.

