ADDED : பிப் 14, 2024 04:45 AM

மாண்டியாவில் போட்டியிட, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி மறுப்பதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில். திரைப்பட நடிகரான இவர், கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் உள்ளார். கட்சியின் அடுத்த தலைமுறை தலைவர் நிகில் தான் என்று, கட்சியினர் கூறி வருகின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக இருந்தார். அப்போது, மாண்டியா தொகுதியில் நிகில் போட்டியிட்டார்.
ஆனால் சுயேச்சையாக போட்டியிட்ட, சுமலதாவிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த, சட்டசபை தேர்தலில் ராம்நகர் தொகுதியில் போட்டியிட்ட நிகில், அங்கும் தோல்வி அடைந்தார்.
முற்றிலும் கோணல்
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல், இரண்டு தேர்தலிலும் மகன் தோல்வி அடைந்ததால், குமாரசாமி உட்பட அவரது குடும்பத்தினர் மனம் உடைந்தனர். இதனால், நிகிலும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கினார்.
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்து போட்டியிடுவதால் மாண்டியா தொகுதியில், நிகிலை மீண்டும் போட்டியிட வைக்க வேண்டும் என்று, குமாரசாமிக்கு, ம.ஜ.த., தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் எக்காரணம் கொண்டும், மாண்டியாவில் போட்டியிட மாட்டேன் என்று நிகில் கூறி உள்ளார்.
இதற்கான பின்னணி குறித்து காரணம் வெளியாகி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் தோற்ற பின், மாண்டியா பக்கம் நிகில் எட்டிக்கூட பார்க்கவில்லை. இப்படி இருக்கும் போது, திடீரென வேட்பாளராக நின்றால், மக்கள் ஏற்றுக்கொள்வரா என்று, யோசித்து வருகிறார்.
ஹாட்ரிக் தோல்வி
ஏற்கனவே இரண்டு முறை தோற்ற நிகில், மீண்டும் தோற்று போனால், 'ஹாட்ரிக் தோல்வி' என்ற அவப்பெயரை சம்பாதிக்க நேரிடும்.
குமாரசாமி குடும்பத்தினர், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நிகில் மாண்டியாவில் போட்டியிடும் போது, வெளி மாவட்ட நபர் என்று அவருக்கு முத்திரை குத்தி, மாண்டியா காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்வதற்கு, எடுத்து கொடுத்த மாதிரி ஆகிவிடும் என்றும், நிகில் யோசிக்கிறார்.
ஒரு வேளை போட்டியிட்டால் சுமலதா குரூப் 'அண்டர் கிரவுண்ட்' வேலை செய்து தோற்கடிப்பார்களோ என்ற பயமும் நிலவுகிறது.
இது போன்ற சில காரணங்களால், மாண்டியாவில் போட்டியிட அவர் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

