தொண்டையை அறுப்பது போன்ற வலியை உண்டாக்கும் நிம்பஸ் வகை கொரோனா பரவல்
தொண்டையை அறுப்பது போன்ற வலியை உண்டாக்கும் நிம்பஸ் வகை கொரோனா பரவல்
ADDED : ஜூன் 18, 2025 02:13 AM

புதுடில்லி: கொரோனா தொற்று மீண்டும் பரவத்துவங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் தொண்டையை பிளேடால் கிழித்து புண்ணாக்குவது போன்ற வலியை ஏற்படுத்தும், 'நிம்பஸ்' என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று பரவத் துவங்கியுள்ளது.
கடந்த, 2019ல் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகையே உலுக்கியது. சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த தொற்று பரவல், புதுப்புது வடிவங்களில் உருமாறி, தற்போது மீண்டும் பரவி வருகிறது.
ஆனால், அந்த வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
கொரோனா பரவலை உலக சுகாதார அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது. உருமாறிய, 'ஒமைக்ரான்' வகையை சேர்ந்த, 'நிம்பஸ்' எனப்படும், என்.பி.1.8.1 என்ற வைரஸ் தற்போது பரவி வருவதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இந்த வைரஸ் அதிகம் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது.
கலிபோர்னியா, நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட குறைந்தது, 13 அமெரிக்க மாகாணங்களில் நிம்பஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் மே மாத இறுதி வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில், 10 சதவீதம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆசியாவின் சில பகுதிகளில், குறிப்பாக சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தியாவிலும் கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவாகியுள்ளன. இந்தியாவில், கொரோனா இறப்பு, 100ஐ தாண்டிஉள்ளது. ஆனால், 'நிம்பஸ்' வகை தொற்று இதுவரை இங்கு கண்டறியப்படவில்லை.
இந்த வகை வைரஸ் உயிரைக் கொல்லும் அபாயத்தை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிம்பஸைத் தவிர, எக்ஸ்.எப்.ஜி., என்ற திரிபு வைரசும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.