பயப்படாதீங்க...! நிபா வைரஸ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது: கேரளா அரசு ஆறுதல்
பயப்படாதீங்க...! நிபா வைரஸ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது: கேரளா அரசு ஆறுதல்
ADDED : செப் 23, 2024 12:45 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. பயப்பட தேவையில்லை என கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர், 'நிபா' பாதிப்பு ஏற்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இறந்த நபருடன், 267 பேர் தொடர்பில் இருந்த நிலையில், 177 பேர் முதன்மை பட்டியலில் உள்ளனர்; 90 பேர் இரண்டாம் நிலை பட்டியலில் உள்ளனர். இவர்களில் இருவருக்கு நிபா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் மலப்புரம் மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பயப்படாதீங்க!
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸை சுகாதாரத்துறை கட்டுப்படுத்தியுள்ளது. மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரிந்தல்மன்னா எம்.இ.எஸ்., மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 32 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
நிபா தொற்றுக்கு 24 வயது இளைஞர் உயிரிழந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் உள்ள ஐந்து வார்டுகள் கட்டுப்பாட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடைகளை இரவு 7 மணிக்குள் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் டியூஷன் சென்டர்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.