கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் 'நிபா' பாலக்காடு உட்பட 3 மாவட்டங்களில் 'அலெர்ட்'
கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் 'நிபா' பாலக்காடு உட்பட 3 மாவட்டங்களில் 'அலெர்ட்'
UPDATED : ஜூலை 05, 2025 04:04 AM
ADDED : ஜூலை 04, 2025 11:49 PM

திருவனந்தபுரம்: கேரளாவில், 'நிபா வைரஸ்' பரவல் மீண்டும் கண்டறியப்பட்டதை அடுத்து, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.
கேரளாவில், கடந்தாண்டு ஜூலையில் மலப்புரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனை நிபா வைரஸ் தாக்கியது.
முன்னெச்சரிக்கை
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பல்வேறு இணைநோய்கள் இருந்ததால், சிறுவன் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மத்திய சுகாதாரக் குழு, கேரளா விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததை தொடர்ந்து வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த சூழலில், மலப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மே மாதம் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்; பின் குணமடைந்தார்.
இந்நிலையில், கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவ துவங்கிஉள்ளது.
மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது.
மலப்புரம் மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், இது உறுதி செய்யப்பட்டது.
அடுத்தகட்ட பரிசோதனைக்காக, பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள், மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
அது மேலும் பரவாமல் தடுக்க, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிப்பை கண்டறிதல், கட்டுப்பாட்டை திட்டமிடல் போன்ற பணிகளுக்கு மூன்று மாவட்டங்களிலும் தலா 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இலவச எண்
முதற்கட்டமாக, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி துரிதபடுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்களுக்கு, உள்ளூர் போலீசார் உதவியாக இருப்பர்.
தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு மண்டலங்களை அறிவிக்க மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தொடர்பான தகவல்களுக்கு இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வைரஸ் பரவலைத் தடுக்க கேரள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.