நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் லோக்சபா தேர்தலில் போட்டி?
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் லோக்சபா தேர்தலில் போட்டி?
ADDED : பிப் 28, 2024 06:16 AM

ஹூப்பள்ளி : லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக, மத்திய பார்லிமென்ட் விவகார அமைச்சர்பிரஹலாத் ஜோஷி கூறி உள்ளார்.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் இருந்து, மத்திய அமைச்சர்கள் போட்டியிடலாம் என்று பேச்சு அடிபடுகிறது. பெங்களூரு தெற்கு தொகுதியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெங்களூரு வடக்கில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, ஹுப்பள்ளியில் மத்திய பார்லிமென்ட் விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டியில், ''லோக்சபா தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
கர்நாடகா அல்லது பிற மாநில தொகுதிகளில் இருந்து போட்டியிடலாம். எங்கு இருந்து போட்டி என்று, இன்னும் முடிவு செய்யவில்லை,'' என்றார்.
நிர்மலா சீதாராமன் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். கர்நாடகாவில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட அவரது பதவிக்காலம் 2028 ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது.
இதுபோல குஜராத்தில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வாகி உள்ள, ஜெய்சங்கர் பதவிக்காலம் 2029ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

