கோலார் தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளர் நிசர்கா நாராயணசாமி?
கோலார் தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளர் நிசர்கா நாராயணசாமி?
ADDED : பிப் 25, 2024 02:49 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் கோலார் தொகுதியில், பா.ஜ., கூட்டணி வேட்பாளராக, முன்னாள் எம்.எல்.ஏ., நிசர்கா நாராயணசாமியை களமிறக்க, குமாரசாமி முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரசின் கோட்டையாக இருந்த கோலார் லோக்சபா தொகுதியில் இருந்து, கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா, தொடர்ந்து ஏழு முறை எம்.பி.,ஆக வெற்றி பெற்றார்.
கடந்த லோக்சபா தேர்தலில் கோஷ்டி அரசியலால், அவர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் தேசிய அரசியலுக்கு செல்ல விரும்புகிறார்.
வழக்கம்போல் முனியப்பா போட்டியிட, காங்கிரசில் ஒரு கோஷ்டி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து உள்ள, ம.ஜ.த., கோலார் தொகுதியை கேட்டு வருகிறது. அந்த தொகுதி கிடைத்தால் ம.ஜ.த., சார்பில், முல்பாகல் எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத் களம் இறக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குமாரசாமி, திட்டத்தை மாற்றி உள்ளார்.
கோலார் தொகுதியில் ம.ஜ.த., வேட்பாளராக, தேவனஹள்ளி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., நிசர்கா நாராயணசாமியை, களமிறக்க முயற்சி செய்து வருகிறார்.
கோலார் 'தனி' தொகுதி ஆகும். நிசர்கா நாராயணசாமியும் தலித் ஆவார். அவரை களமிறக்கினால் தலித், ஒக்கலிகர் சமூக ஓட்டுகளை எளிதில் பெறலாம் என்று, குமாரசாமி கணக்காக உள்ளது.