ADDED : செப் 19, 2024 11:05 PM

கிராமப்பகுதிகளில் வசிப்போர் ஏரி, குளம், கிணறு, வாய்க்கால், ஆறுகளில் நீச்சல் அடிக்க கற்றுக் கொள்கின்றனர். ஆனால் நகர்புறங்களில் வசிக்கும் பெரும்பாலோனாருக்கு, நீச்சல் அடிக்க தெரிவது இல்லை. இவர்கள் நீச்சல் கற்று கொள்ள இருக்கும், ஒரே இடம் நீச்சல் குளம் தான்.
நீச்சல் அடிக்க தெரியாவிட்டால், நீர்நிலைகளில் ஆபத்தில் சிக்கும் போது, உயிர் பிழைப்பது கஷ்டம் தான். மனிதன் வாழ்வில் நீச்சல் அடிக்க தெரிவதும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
நீச்சலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஆசியன் விளையாட்டு போட்டிகளில் நீச்சல் போட்டியும், ஒரு அங்கமாக உள்ளது.
நீச்சல் போட்டியில் பங்கேற்று, ஏராளமானோர் பதக்கங்கள் வென்று உள்ளனர். இதுபோல நீச்சல் போட்டிகளில் பல சாதனைகள் படைத்து, பெங்களூரின் நிஷா மில்லட் என்பவரும் அசத்தி உள்ளார்.
7 வயதில் நீச்சல்
நிஷா மில்லட், கடந்த 1982ல் பெங்களூரில் பிறந்தவர். அவர் பிறந்ததில் இருந்து பெற்றோர் தமிழகத்தின் சென்னையில் வசித்தனர். அவருக்கு 7 வயது இருக்கும் போது, நீச்சல் அடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. தந்தை பயிற்சி அளித்தார். பின், செனாய்நகர் நீச்சல் கிளப்பில் சேர்த்து விட்டார். கடந்த 1992 ல் மாநில அளவில் நடந்த நீச்சல் போட்டியில் முதல்முறையாக நிஷா மில்லட் பங்கேற்றார். 50 மீ., துார நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தினார்.
பின், அவரது நீச்சல் திறமையை மெருகேற்ற பெற்றோர் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். பள்ளியில் படித்து கொண்டே, நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்றார். ஹாங்காங்கில், 1994ல் நடந்த ஆசியன் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றார். தாய்லாந்தில், 1998ல் நடந்த ஆசியன் விளையாட்டு; ஆஸ்திரேலியாவின் பெர்த்தில், 1999ல் நடந்த உலக சாம்பியன்ஷிப், அமெரிக்காவின் இண்டியானா போலிசில் 2004ல் நடந்த, உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார்.
ஒரு நிமிடம்
ஆனால், 2004 ல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நுாலிழையில் இழந்தார். பின், நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 100 மீ., இலக்கை ஒரு நிமிடத்தில் அடைந்த, பெண் நீச்சல் வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
இவரை பாராட்டும் விதமாக, நமது மத்திய அரசு, 2000ல் அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது. 1997, 1999ல் பிரதமர் விருது; 2001ல் கர்நாடக அரசின் ராஜ்யோத்சவா விருது; 2002ல் ஏகலைவா விருதும் வழங்கியது
- நமது நிருபர் -.