ADDED : ஜன 18, 2025 08:53 AM

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் விரைவில் தேர்தல் அரசியலில் களம் இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
பீஹார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள நிறுவனருமான நிதிஷ்குமார் அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர். இவரின் மகன் நிஷாந்த் குமார் பீஹார் அரசியல் களத்தில் அடி எடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விரைவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பீஹார் மாநில மக்கள் தமது தந்தை நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கட்சி சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற நிஷாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாட்னா அருகே உள்ள பக்தியார்பூரில் தமது தாத்தாவும், சுதந்திர போராட்ட தியாகியுமான ராம்லக்கன் சிங் வைத்யாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நிஷாந்த் குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது;
எனது தந்தையின் தலைமையில் பீஹார் மாநிலம் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. ஆகையால் எனது தந்தைக்கும், கட்சிக்கும் மக்கள் ஓட்டளித்து மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம், அரசியலில் நுழையும் எண்ணம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் சிரித்தபடியே அங்கிருந்து சென்றுவிட்டார் நிஷாந்த்.
எனினும், தந்தையை பின்பற்றி வரப்போகும் பீஹார் சட்டசபை தேர்தலில், நிஷாந்த் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.