UPDATED : ஜன 21, 2025 11:34 AM
ADDED : ஜன 21, 2025 07:16 AM

புதுடில்லி: அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்பதை முன்னிட்டு நடந்த தனியார் வரவேற்பு விழாவில், ரிலையன்ஸ் பவுண்டேசன் தலைவர் நீடா அம்பானி பங்கேற்றார்.
அவர் அணிந்திருந்த காஞ்சிப்பட்டு சேலையில், காஞ்சிபுரத்தின் பழம்பெருமை வாய்ந்த கோவில்களின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில், இரு தலைப்பட்சி, மயில், கோபுரங்கள் இடம் பெற்றிருந்தன.
ஸ்வதேஷ் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த சேலை, தேசிய விருது பெற்ற கலைஞர் கிருஷ்ணமூர்த்தியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த வெல்வெட் ஜாக்கெட், மணீஷ் மல்ஹோத்ராவால் உருவாக்கப்பட்டது. அத்துடன் கண்கவரும் கிளி வடிவம் கொண்ட, 200 ஆண்டுகள் பழமையான அரிய பதக்கம் ஒன்றையும் அவர் அணிந்திருந்தார்.
தங்கத்தில் மரகதம், மாணிக்கம், வைரம், முத்துக்களால் உருவாக்கப்பட்ட இந்த பதக்கம் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்தது. இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும், கைவினைக்கலைஞர்களின் திறமையை வெளியுலகம் அறியும் வகையிலும், அவற்றை அணிந்திருந்தார் என்று ரிலையன்ஸ் பவுண்டேசன் தெரிவித்துள்ளது.

