ADDED : பிப் 20, 2024 07:04 AM

பெங்களூரு: ''குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் அரசை வலியுறுத்தினார்.
சட்டசபையில், ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ், நேற்று அவர் பேசியதாவது:
கோடைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே, கர்நாடகாவில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் குடிப்பதற்கு தண்ணீரின்றி, மக்கள் புலம் பெயர்கின்றனர்.
எனவே, அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
கே.ஆர்.எஸ்., பத்ரா அணைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. இது தொடர்பாக வல்லுனர்கள் ஏற்கனவே ஆதங்கம் வெளிப்படுத்தி உள்ளனர். அடுத்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது அணைகளில் தண்ணீர் அளவு மேலும் குறையும்.
எனவே இப்போதே அரசு விழித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே வறண்டுள்ள ஆழ்துளை கிணறுகளை பழுது நீக்காமல், பி.டி.ஏ., நிதியில் புதிதாக அமைப்பதற்கு அனுமதி தர வேண்டும்.
இதற்கு முன்பு, ஒரு டேங்கரின் விலை 500 ரூபாயாக இருந்தது. தற்போது, தண்ணீர் பிரச்னையால், மூன்று, நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதை தீவிரமாக கருதி, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

