ADDED : செப் 28, 2024 12:19 AM

மும்பை: லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவும், அதன் பிறகும் பிரதமராகும் வாய்ப்பு பலமுறை தன்னை தேடி வந்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்றும் தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில், 'இண்டியா டுடே' பத்திரிகையின் கருத்தரங்கம் நேற்று நடந்தது.
இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.
அவரிடம், பார்வையாளர் ஒருவர், 'நீங்கள் பிரதமராக விரும்பினால், உங்களுக்கு முழு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் லோக்சபா தேர்தல் நேரத்தில் தெரிவித்தார். அது குறித்து விரிவாக விளக்க முடியுமா' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நிதின் கட்கரி, “லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவும், அதற்கு பிறகும் பிரதமராகும் வாய்ப்பு பலமுறை என்னை தேடி வந்தது. என் கொள்கையில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
“அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. பிரதமராக வேண்டும் என்பது என் நோக்கமல்ல. என் கொள்கையில் உறுதியாக உள்ளேன்,” என்றார்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும், நிதின் கட்கரி இதே கருத்தை தெரிவித்திருந்தார்.