தேஜ கூட்டணி சட்டசபை கட்சித் தலைவராக நிதிஷ் தேர்வு: நாளை 11.30 மணிக்கு முதல்வராக பதவியேற்பு
தேஜ கூட்டணி சட்டசபை கட்சித் தலைவராக நிதிஷ் தேர்வு: நாளை 11.30 மணிக்கு முதல்வராக பதவியேற்பு
UPDATED : நவ 19, 2025 06:41 PM
ADDED : நவ 19, 2025 05:05 PM

பாட்னா: தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சித் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை (நவ.20) அவர் பீஹாரின் முதல்வராக பதவியேற்கிறார்.
பீஹாரில் சட்டசபை தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. 10வது முறையாக நிதிஷ்குமார் நாளை முதல்வர் பதவியேற்கிறார். அதன் முன்னோட்டமாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
சாம்ராட் சவுத்ரி, சிராக் பாஸ்வான், விஜய்குமார் சின்ஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமாரை, எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அவரின் பெயரை சாம்ராட் சவுத்ரி முன்மொழிய, அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரித்து வாக்களித்தனர்.
இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரும், கவர்னர் ஆரிப் முகமதுவை சந்திக்கும் நிதிஷ்குமார், அவரிடம் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளிப்பார். தொடர்ந்து, நாளை (நவ.20) காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது.
இந்த விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

