பீஹார் முதல்வராக 10வது முறை பதவியேற்றார் நிதிஷ் குமார்; பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா பங்கேற்பு
பீஹார் முதல்வராக 10வது முறை பதவியேற்றார் நிதிஷ் குமார்; பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா பங்கேற்பு
ADDED : நவ 21, 2025 04:26 AM

பாட்னா: பீஹார் முதல்வராக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக நேற்று பதவியேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர் .
பீஹாரில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 11ல் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்த கூட்டணி, 202 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ., 89 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கூட்டணி கட்சிகளான லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் பஸ்வான் 19; ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5; ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 4 தொகுதி களிலும் வென்றன.
இதையடுத்து, பீஹார் முதல்வராக, 10வது முறையாக நிதிஷ் குமார் நேற்று பதவி ஏற்றார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு, கவர்னர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிதிஷ் உடன், பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முந்தைய ஆட்சியில் துணை முதல்வர்களாக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கும், லோக் ஜனசக்தியைச் சேர்ந்த இருவருக்கும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா,
தொடர்ச்சி 5ம் பக்கம்
பீஹார் முதல்வராக...
3ம் பக்கம் தொடர்ச்சி
பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வடகிழக்கு மாநிலமான அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், டில்லி முதல்வர் ரேகா குப்தா, தே.ஜ., கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரலாறு காணாத வெற்றியை தந்த பீஹார் மக்களுக்கு, பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தே.ஜ., கூட்டணி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
நிதிஷ் குமார் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றதை அடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய்குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர். முதல்வர் நிதிஷ் உட்பட பதவியேற்ற அனைவருக்கும், பிரதமர் மோடி தன் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

