ADDED : ஜூலை 04, 2025 11:46 PM

ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ள பீஹாரில், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
தேர்தலில் வென்று ஆட்சியை மீண்டும் தக்கவைக்க, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் -- பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக உள்ளது.
என்ன பிரச்னை?
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் பஸ்வான் அணி, ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளன.
இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், பீஹார் முன்னாள் துணை முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் -- காங்., கூட்டணியும் பணியாற்றி வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பீஹாரில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகள் தீவிரம்அடைந்துள்ளன.
இந்நிலையில், சமீபகாலமாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மிகவும் இறுக்கமான முகத்துடனே வலம் வருகிறார்.
அவர் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகவும், துாக்கம் இன்றி தவிப்பதாகவும் கட்சிக்குள் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நிலைக்கு காரணம், பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அல்ல.
வேறு என்ன தான் பிரச்னை என அலசி ஆராய்ந்ததில், பீஹார் சட்டசபை தேர்தலில் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பஸ்வான் போட்டியிட உள்ளதே முதல்வர் நிதிஷ் குமார் துாக்கத்தை தொலைத்ததற்கு காரணம் என, தெரியவந்துள்ளது.
கடந்த 2020 சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களை எதிர்த்து, தன் கட்சி வேட்பாளர்களை சிராக் பஸ்வான் நிறுத்தினார்.
முட்டுக்கட்டை
இத்தேர்தலில், அவரது கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றாலும், பல்வேறு தொகுதிகளில், நிதிஷ் குமார் வேட்பாளர்களின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இதனால் மூன்றாவது இடத்துக்கு நிதிஷ் தள்ளப்பட்டார்.
கடந்த தேர்தலில், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், 75; பா.ஜ., 74; ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்றன. எனினும் முதல்வர் நாற்காலி நிதிஷ் குமாருக்கே கிடைத்தது.
கடந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் பலம் குறைந்ததற்கு சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் ஒரு முக்கிய காரணம்.
பீஹாரில் வளர்ந்து வரும் கட்சியாக உள்ள லோக் ஜனசக்தி, கடந்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியின் கீழ், அம்மாநிலத்தின் ஐந்து தொகுதிகளில் போட்டி யிட்டது. அனைத்து தொகுதிகளையும் வென்றது. இதையடுத்து, சிராக் பஸ்வான் மத்திய அமைச்சர் ஆனார்.
பிரதமர் மோடியின் 3.0 ஆட்சியில் கேபினட் அமைச்சர் பதவி என சகல வசதிகள் கிடைத்தும், பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக சிராக் பஸ்வான் அறிவித்திருப்பது, முதல்வர் நிதிஷ் குமாரை கவலை அடையச் செய்துள்ளது.
சமீபத்தில், முதல்வர் நிதிஷ் குமாரை மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் பாட்னாவில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், 'நீங்கள் ஒரு இளம் எம்.பி., மத்திய அமைச்சரும் கூட... சட்டசபை தேர்தலில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள்?' என, நிதிஷ் குமார் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த சிராக் பஸ்வான், 'பீஹார் என்னை அழைக்கிறது. பீஹார் தான் எனக்கு முக்கியம்' என, தெரிவித்துள்ளார். 'எந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளீர்கள்? என நிதிஷ் கேள்வி எழுப்ப, 'இன்னும் முடிவு செய்யவில்லை. இறுதியானதும் உங்களின் ஆசியை பெற வருவேன்' என, சிராக் பதிலளித்து உள்ளார்.
முதல்வர் நிதிஷ் குமாருக்கு தற்போது 74 வயது. அவர் தான் முதல்வர் வேட்பாளர் என, ஐக்கிய ஜனதா தளம் கூறி வருகிறது. இதை, பா.ஜ., மேலிட தலைவர்களோ அல்லது மாநில தலைவர்களோ வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.
செல்வாக்கு குறைவு
'உங்கள் நேரம் முடிந்து விட்டது. புதிய முதல்வருக்கு வழிவிடுங்கள்' என, நிதிஷ் குமாரிடம் பா.ஜ., நேரடியாக சொல்ல முடியாது. அதனால், அவரது செல்வாக்கை குறைக்க சிராக் பஸ்வானை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2005 முதல் பீஹார் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாருக்கு, வரும் சட்டசபை தேர்தல் ஒரு விஷப்பரீட்சை தான். கூட்டணியிலேயே தனக்கு போட்டியாக உருவாகியுள்ள சிராக் பஸ்வானை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
- நமது சிறப்பு நிருபர் - .