ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலையில் பூந்தொட்டி வைத்த நிதிஷ்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலையில் பூந்தொட்டி வைத்த நிதிஷ்
ADDED : மே 27, 2025 03:27 AM

பாட்னா : பீஹாரில், அரசு நிகழ்ச்சியில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி வழங்கிய பூந்தொட்டியை, அவரது தலையிலேயே முதல்வர் நிதிஷ் குமார் வைத்த செயல் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாட்னாவில், அரசு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாநில கல்வித் துறையின் கூடுதல் முதன்மை செயலரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ்.சித்தார்தா, நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நிதிஷ் குமாருக்கு, பூந்தொட்டி கொடுத்து வரவேற்றார்.
அதை வாங்கிய நிதிஷ் குமார், யாரும் எதிர்பாராத வகையில், சித்தார்தா தலையில் அந்த பூந்தொட்டியை வைத்து சிரித்தார். இது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. எனினும், முதல்வர் நிதிஷ் குமாரின் இந்த செயலை ஒருதரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அவர் இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது முதன்முறையல்ல.