ஆட்சியை தக்கவைக்க அதிரடி காட்டும் நிதிஷ்: பெண்கள், இளைஞர்களுக்காக தாராள சலுகை
ஆட்சியை தக்கவைக்க அதிரடி காட்டும் நிதிஷ்: பெண்கள், இளைஞர்களுக்காக தாராள சலுகை
ADDED : ஜூலை 18, 2025 01:38 AM

பீஹார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, மீண்டும் ஐக்கிய ஜனதா தள ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் நிதிஷ் குமார் எடுத்து வருகிறார்.
பீஹாரை பொறுத்தவரை ஒட்டுமொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். இதனால், அவர்களது ஓட்டுகளை அள்ள குறிவைத்திருக்கிறார் நிதிஷ்.
இதற்காகவே கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மிக முக்கியமான முடிவை அவர் எடுத்தார்.
இட ஒதுக்கீடு
மாநில அரசு வேலைகளில் பீஹார் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அளிக்க, நிதிஷ் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு முன் கூட, அரசு வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.
தற்போதைய முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்தார், அம்மாநில முதன்மை செயலர் சித்தார்த். இதன் வாயிலாக, அரசு வேலைகளில் 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பீஹார் பெண்களுக்கு மட்டுமே என உறுதியாகியுள்ளது.
பிற மாநில பெண்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்தால் பொதுப் பிரிவு அடிப்படையிலேயே அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் எனவும் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னுரிமை
நிதிஷ் அரசின் இந்த முடிவால் இனி கல்வி, சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட துறைகளில் பீஹார் பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். பெண் வாக்காளர்களுக்காக இப்படி தாராள திட்டத்தை அறிவித்த நிதிஷ், இளைஞர்களின் ஓட்டுகளையும் சிந்தாமல் சிதறாமல் பெற ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு. திறனை வளர்க்க விரும்பும் இளைஞர்களுக்காக, திறன் வளர்ப்பு பயிற்சியை அளிக்கும் பல்கலையை நிறுவப் போவதாகவும் நிதிஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 தேர்தலின்போது கூட பெண்கள், இளைஞர்களை குறிவைத்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார் நிதிஷ்.
அது அவருக்கு பெரிதாக கைகொடுக்க, இந்த முறையும், அதே அஸ்திரத்தை அவர் கையில் எடுத்துள்ளார். அது பலன் தருமா? தராதா? என்பது நவம்பருக்குள் தெரிந்துவிடும்.
- நமது சிறப்பு நிருபர் -