ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி
ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி
ADDED : டிச 19, 2024 03:12 PM

புதுடில்லி: ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வழங்கிய நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. பார்லிமென்ட் இரு அவைகளும் நாளை (டிச.,20) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளில் இருந்தே, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பான பிரச்னையை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தன.
இதற்கிடையே, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக, எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணி நோட்டீஸ் கொடுத்துள்ள விவகாரம், நாடு முழுதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்லிமென்டின், 75 ஆண்டு வரலாற்றில் இது முதல் முறை என்று கூறப்படுகிறது.
லோக்சபா சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிகழ்வுகள் நடந்திருந்தாலும், ராஜ்யசபா தலைவருக்கு எதிராக இப்போது தான் முதல் முறையாக நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இந்த தீர்மான நோட்டீசில், 'திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த, 60 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.
ராஜ்யசபா விதிகளின்படி, சபை தலைவரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வந்தால், சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில், 50 சதவீதத்திற்கு மேலான எம்.பி.,க்களின் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற வேண்டும். அத்துடன், லோக்சபாவிலும் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான், ராஜ்யசபா தலைவர் பதவி விலகுவார்.
ஆனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், பா.ஜ., தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இருப்பதால், எதிர்க்கட்சிகளின் தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை.
இந்நிலையில் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வழங்கிய நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.தீர்மானத்தில், விளம்பரம் தேடும் நோக்கத்தில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம் பெற்று இருந்ததாக தள்ளுபடி செய்த ராஜ்ய சபா துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா தலைவர் பதவி வகிப்பவர், துணை ஜனாதிபதியாகவும் இருக்கிறார். அதனால், உயரிய பதவியின் நேர்மைக்கும், நிலைத்தன்மைக்கும் குந்தகம் ஏற்படுத்தவே தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என பா.ஜ., எம்.பிக்கள் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.