மாத சம்பளம் ரூ.1 லட்சம் வாங்குபவர்களுக்கு...வருமான வரி கிடையாது
மாத சம்பளம் ரூ.1 லட்சம் வாங்குபவர்களுக்கு...வருமான வரி கிடையாது
UPDATED : பிப் 01, 2025 11:41 PM
ADDED : பிப் 01, 2025 11:28 PM

புதுடில்லி : நடுத்தர வருவாய் பிரிவினரின் வரிச் சுமையை குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் இனி வரி செலுத்த தேவையில்லை என, மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வருமான உச்ச வரம்பு, கடந்த ஆண்டு 7 லட்சம் ரூபாயாக இருந்தது; நேற்றைய அறிவிப்பின்படி, ஆண்டு வருமானம் 12.75 லட்சம் ரூபாயாக இருந்தாலும், வரிக்கழிவை முறையாக பயன்படுத்தினால், வரி செலுத்த தேவையில்லை.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார்.
அதில், முக்கிய அம்சமாக வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, 7 லட்சத்தில் இருந்து 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, புதிய முறையில் வரி செலுத்துவதை தேர்வு செய்வோருக்கு பொருந்தும்.
![]() |
பாராட்டு
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் மற்றும் 75,000 ரூபாய் நிலையான வரிக்கழிவும் சேர்த்தால், 12.75 லட்சம் ரூபாய் வரை இனி வருமான வரி செலுத்த தேவையில்லை.
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோர், 4 லட்சம் ரூபாய் முதல் கணக்கிட்டு, அந்தந்த வரி அடுக்குகளின்படி வருமான வரி செலுத்த வேண்டும்.
இதிலும், வரி அடுக்குகள் மாற்றப்பட்டுள்ளதால், 8 லட்சம் வருமானத்துக்கு செலுத்த வேண்டிய வரியில் 30,000 ரூபாயும், 24 லட்சம் வருமானத்துக்கு செலுத்த வேண்டிய வரியில் 1,10,000 ரூபாயும் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு சிறப்பு வருவாய் ஏதுமில்லாத மாத சம்பளக்காரர்கள், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அப்போது, பிரதமர் மோடி உட்பட ஆளும் கூட்டணி எம்.பி.,க்கள் அனைவரும் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
வரி இழப்பு
வரி செலுத்துவோருக்கு கூடுதல் தொகை மிச்சமாகும் வகையில் வரி அடுக்குகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் நடுத்தர மக்களின் கையில் கூடுதல் தொகை இருக்கும்; இது, அவர்களது வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ள உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வருமான வரியில் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் விலக்கு அளித்திருப்பதன் வாயிலாக, அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றாலும், நடுத்தர மக்களுக்கு நன்மை கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வருமான வரி விலக்கை 12 லட்சம் ரூபாய் வரை அதிகரித்திருப்பதன் வாயிலாக, பொருட்களின் நுகர்வு அதிகரித்து உற்பத்தி துறை ஊக்கம் பெறும் என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க துாண்டுதலாக அமையும் என்றும் நிதிச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுடன் உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா போட்டியிடவும், விரைவான பொருளாதார வளர்ச்சி காணும் நாடாக நீடிக்கவும் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்பட்டிருப்பது உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த வாரம் புதிய மசோதா
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும்; முதலில் நம்பிக்கை, பிறகு ஆய்வு என்ற அடிப்படையில், வழக்குகளை குறைக்கும் நோக்கில் அது இருக்கும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.