பால் விலையில் உயர்வு இல்லை! கே.எம்.எப்., தலைவர் தகவல்
பால் விலையில் உயர்வு இல்லை! கே.எம்.எப்., தலைவர் தகவல்
ADDED : டிச 05, 2024 07:29 AM
பெங்களூரு: “பால் விலையில் தற்போதைக்கு உயர்வு இல்லை,” என, கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பின் தலைவர் பீமா நாயக் கூறினார்.
பெங்களூரு ரூரல், ராம் நகர், கோலார், சிக்கபல்லாபூர், மாண்டியா, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் கே.எம்.எப்., அதிக அளவில் பால் கொள்முதல் செய்கிறது.
பாலை 'நந்தினி' என்ற பெயரில் கே.எம்.எப்., விற்பனை செய்கிறது. இந்நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் பால் விலை உயர்த்தபடலாம் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து கே.எம்.எப்., தலைவர் பீமா நாயக் கூறியதாவது:
நந்தினி பால் விலையை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை. ஆனால், கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. நந்தினி பொருட்களின் விற்பனை, டில்லியில் கடந்த மாதம் 21ம் தேதி துவங்கப்பட்டது. அங்கு தினமும் 5,000 லிட்டர் முதல் 6,000 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
டில்லியில் நந்தினி பொருட்களை விற்க வேண்டும் என்ற எங்களது கனவு இப்போது நனவாகியுள்ளது. மற்ற பிராண்டுகள் தயாரிப்புகளை பற்றி நான் எதுவும் பேசமாட்டேன். நந்தினி பொருள்களுக்கு என்று தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களின் தேவைக்கு ஏற்ப நாங்கள் பொருட்களை தயாரித்து வழங்குகிறோம். வியாபாரத்தில் போட்டி ஏற்படுவது சகஜம் தான். அனைத்தையும் எதிர்கொண்டு நாங்கள் வெற்றி பெறுவோம்.
நந்தினியும், அமுலும் இணைய போவதாக வதந்தி பரவுகிறது. அப்படி எதுவும் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கு நாங்கள் ஸ்பான்சர் செய்தோம். இதனால் நந்தினி பிராண்டு தயாரிப்புகள் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
இவ்வாறு அவர் கூறினார்.