எந்த மொழியையும் திணிக்கக் கூடாது; ஆங்கிலம் போலவே ஹிந்தியும் அவசியம்; சொல்கிறார் பவன் கல்யாண்
எந்த மொழியையும் திணிக்கக் கூடாது; ஆங்கிலம் போலவே ஹிந்தியும் அவசியம்; சொல்கிறார் பவன் கல்யாண்
ADDED : ஜூலை 23, 2025 10:07 PM

ஹைதராபாத்: 'எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக் கூடாது. ஆங்கிலம் போலவே ஹிந்தியும் இன்று அவசியமாகிவிட்டது. ஆனால் கட்டாயப்படுத்தாமல், அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்க வேண்டும்,' என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. தேசிய ஒற்றுமைக்கு நான் ஆதரவானவன். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு நடுவே வாழ்ந்த கொண்டிருக்கிறோம். எனவே, என்னைப் பொறுத்தவரையில் ஹிந்தி அவசியமானது. அரசியல் நோக்கத்திற்காக மொழி பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் அரசியல் கட்சிகளோ, சிலரோ மொழி விவகாரத்தை ஒரு பிரச்னையாக உருவாக்குகிறார்கள்.
நான் பள்ளியில் பயிலும் போது, ஹிந்தி எங்களுக்கு 2வது மொழி பாடமாகும். எனவே, ஹிந்தியை என்னால் பேசவும், எழுதவும் முடியும். ஏனெனில், நான் அதனை படித்துள்ளேன். ஆனால், தற்போது, ஏன் இந்த விவகாரம் இவ்வளவு பெரிய பிரச்னையானது என தெரியவில்லை.
சத்தீஸ்கர், ஒடிசா, போன்ற ஹிந்தி தொடர்பு மாநிலங்களுடன் எல்லை பகிரும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கூட ஹிந்தி ஏன் இப்போது ஒரு பெரிய பிரச்னையாக மாறிவிட்டது என தெரியவில்லை. தெலங்கானாவில் உருது மற்றும் தெலுங்கு கலந்து பேசப்படுகிறது. மக்கள் மருத்துவமனைக்கு பதிலாக 'தவாகானா' என்று தான் சொல்கிறார்கள். இதில் தவறு என்ன?
தெலங்கானாவில் உள்ள சில அரசியல் தலைவர்கள், ஹிந்தியை அரசியலாக்குகின்றனர். பாஜ மற்றும் மோடி மீதான எதிர்ப்பை ஹிந்தி மீது திருப்புகின்றனர். அப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். ஆங்கிலம் போலவே ஹிந்தியும் இன்று அவசியமாகிவிட்டது. ஆனால் கட்டாயப்படுத்தாமல், அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்க வேண்டும். பல்மொழி அணுகுமுறை தேவை.
சென்னையில் வளர்ந்ததால், நான் தமிழை விரும்புகிறேன். கர்நாடகா போனால் கன்னடம் பேச முயற்சிக்கிறேன். இதுதான் தேசிய ஒற்றுமைக்கு தேவையான அணுகுமுறை. பாரதியைப் போல, மொழி ஒருங்கிணைப்புக்கான கருவியாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் கட்டாயப்படுத்தினால் எதிர்ப்பு தோன்றும். ஹிந்தியின் தேவையை நியாயமாக விளக்கினால் மக்கள் ஏற்க முன்வருவார்கள், இவ்வாறு அவர் கூறினார்.