பொருளாதார சுதந்திரம் உள்ள பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை: டில்லி ஐகோர்ட்
பொருளாதார சுதந்திரம் உள்ள பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை: டில்லி ஐகோர்ட்
ADDED : அக் 19, 2025 06:12 AM

புதுடில்லி: 'விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெற்றவராக இருந்ததால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை' என, டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
டில்லியை சேர்ந்த பெண் ஒருவர் ரயில்வேயில், 'குரூப் - ஏ' பிரிவு அதிகாரியாக உள்ளார். இவருக்கும் வழக்கறிஞர் ஒருவருக்கும் 2010ல் திருமணம் நடந்தது. ஓராண்டு மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.
அதன் பின் மனைவி மன, உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும், தாம்பத்யத்திற்கு தொடர்ந்து மறுத்ததாகவும் குற்றஞ்சாட்டி கணவர் விவாகரத்து கோரினார். பதிலுக்கு அவரது மனைவியும் கணவன் கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்தார்.
குடும்ப நல நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் மனைவி செய்த கொடுமையின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. விவாகரத்துக்கு சம்மதிப்பதற்காக, 50 லட்சம் ரூபாயை நிரந்தர ஜீவானம்சமாக வழங்க வேண்டும் என மனைவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கணவர் அந்த தொகையை வழங்கவில்லை.
இதை எதிர்த்து விவாகரத்து பெற்ற மனைவி டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். வழக்கை நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் ஹரீஷ் வைத்தியநாதன் சங்கர் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
அவர்கள் வழங்கிய தீர்ப்பு:
நிரந்தர ஜீவனாம்சம் என்பது ஒரு சமூகநீதி பரிமாணமாகவே கருதப்பட வேண்டும். பொருளாதார ரீதியாக வலுவான இரண்டு நபர்களின் வருமானத்தை சமமாக்கும் கருவி அல்ல அது.
ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் வழங்குவது முழுதும் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதை வழங்க உத்தரவிடும் போது வருமானம், சொத்து, நடத்தை மற்றும் பிற சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை கணக்கில் கொள்ள வேண்டும்.
திருமண துணை பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெற்றிருந்தால், ஜீவனாம்சம் வழங்குவது சமூகநீதி ஆகாது. அவர்களுக்கு ஜீவனாம்சம் வழங்கவும் கூடாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.