வளர்ச்சி பணிகளுக்கு பணம் இல்லையா? பா.ஜ., குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதிலடி!
வளர்ச்சி பணிகளுக்கு பணம் இல்லையா? பா.ஜ., குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதிலடி!
ADDED : பிப் 02, 2024 11:14 PM
விஜயபுரா: ''கர்நாடக மாநில அரசில், வளர்ச்சி பணிகளுக்கு பணம் இல்லை என்பது பொய். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி உள்ளோம்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
விஜயபுரா மாவட்டம், முத்தேபிஹாலில் நேற்று நடந்த வாக்குறுதி திட்ட பயனாளிகள் கூட்டம் மற்றும் 227 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி பணிகளை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
மக்களை தவறாக வழிநடத்த, பா.ஜ., பொய்யான செய்திகளை பரப்புகிறது. வளர்ச்சி பணிகளுக்கு பணமில்லை எனில், முத்தேபிஹால் தொகுதியில் 227 கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, பணம் எங்கிருந்து வந்தது. இதன் மூலம் பா.ஜ., பொய் சொல்வது நிரூபணமாகி உள்ளது.
ஆட்சிக்கு வந்த ஏழு மாதங்களில், ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்களே உண்மையான அரசியல்வாதிகள்.
'வாக்குறுதி திட்டத்தை செயல்படுத்த முடியாது; மாநிலம் திவாலாகிவிடும்' என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். எனினும், நாங்கள் ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். மேலும், மாநிலத்தின் நிதி நிலைமை பாதுகாக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேம்படுத்துவதற்காக, பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் கிரஹலட்சுமி திட்டம்; அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய 'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற இந்த சூழ்நிலையில், ஏழைகளுக்கு உதவும் வகையில் வாக்குறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தாண்டு வாக்குறுதி திட்டத்துக்கு, 38,000 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளோம். ஏழைகள், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பணியை செய்துள்ளோம்.
சமூகத்தில் சமத்துவமின்மைக்கு ஜாதி அமைப்பு தான் காரணம். இதனால் சமூக, பொருளாதார சமத்துவமின்மை ஏற்படுகிறது. மேலும், அவர்கள் இலக்கிய பண்பாட்டை இழந்துவிட்டனர்.
தற்போதைய சமூக அமைப்பு ஸ்தம்பித்து விட்டது. எந்த இயக்கமும் இல்லை. பசவண்ணர் வாக்கை கடைப்பிடிக்காவிட்டால், சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

