இனி சீனா இல்லை... இந்தியா தான்! உலகம் முழுதும் குவியும் பாராட்டு
இனி சீனா இல்லை... இந்தியா தான்! உலகம் முழுதும் குவியும் பாராட்டு
ADDED : ஜன 29, 2024 05:47 AM

புதுடில்லி: ஏடன் வளைகுடா பகுதியில், ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்த எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக, நம் நாட்டுக்கு உலக முழுதுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2023 அக்., 7ல் மோதல் துவங்கியதில் இருந்து, ஏடன் வளைகுடா, அரபிக்கடல், செங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஈரான் ஆதரவு பெற்ற ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி படையினர் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
மீட்பு பணி
சமீபத்தில், ஏடன் வளைகுடா பகுதியில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின், 'மார்லின் லுவாண்டா' என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்ததில், கப்பலின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இதில், 22 இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர்.
இவர்கள் உதவி கோரியதை அடுத்து, நம் கடற்படையினர், ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க்கப்பல் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்த கப்பலில் இருந்த தீயை அணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில், நம் கடற்படையின் இந்த செயலுக்காக, நம் நாட்டுக்கு உலக முழுதுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.
பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் அர்பன் கூறுகையில், ''ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில், சீனாவை விட, இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது,'' என்றார்.
கூர்ந்து கவனிப்பு
சமூக வலைதளத்தில், வரலாற்று ஆசிரியர் மார்ட்டின் சாயர்ப்ரே வெளியிட்ட பதிவில், 'இந்தியா தலைமை தாங்குகிறது; அதன் சக்தி எழுச்சி பெறுகிறது. இனி, சீனாவை கொண்டாடுவதை நிறுத்துங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் அபிஜித் அய்யர் மித்ரா வெளியிட்ட பதிவில், 'அரபிக் கடலில் கப்பல் போக்குவரத்துக்கு இந்தியா பாதுகாப்பு அளித்து வருகிறது. ஜிபூட்டியில் தளத்தை வைத்திருக்கும் சீனா அல்ல' என, தெரிவித்துள்ளார்.
'மார்லின் லுவாண்டா' எண்ணெய் கப்பலுக்கு அளிக்கப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ''அவசர அழைப்பின்படி சம்பவ இடத்துக்குச் சென்ற ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க்கப்பல், ஆறு மணி நேரம் போராடி, கப்பலில் இருந்த தீயை அணைத்தது. ''இந்த கப்பலுக்கு உதவ, அமெரிக்கா மற்றும் பிரான்சும் முன்வந்தன. தொடர்ந்து பிராந்தியத்தில் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்,'' என்றார்.