ADDED : செப் 26, 2024 06:31 AM

ஹாசன்: ஹாசனாம்பா திருவிழாவில், திருப்பதி லட்டுக்கு பதிலாக, இஸ்கான் லட்டு வினியோகிக்க ஹாசன் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி கோவிலின் லட்டு பிரசாதத்தில், பிராணி கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹாசன் மாவட்ட கலெக்டர் சத்தியபாமா வெளியிட்ட அறிக்கை:
வரும் அக்டோபர் 24ல், ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படுகிறது. பொதுவாக ஹாசனாம்பா கோவில் திருவிழாவின்போது, பக்தர்களுக்கு வினியோகிக்க திருப்பதியில் இருந்து லட்டு பிரசாதம் வரவழைப்பது வழக்கம்.
ஆனால் திருப்பதி லட்டில், பிராணி கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஹாசனாம்பா கோவிலின் புனிதத்தை காப்பாற்ற வேண்டும். எனவே, இம்முறை திருவிழாவில் இஸ்கானின் லட்டு பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
நடப்பாண்டு முதல், 300 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்குவோருக்கு ஒரு லட்டு, 1,000 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்குவோருக்கு இரண்டு லட்டுகள் வழங்கப்படும். கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பூ அலங்காரம் செய்து அழகாக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

