இனி எந்த தவறும் நடந்து விடக்கூடாது : வசந்த பஞ்சமிக்கு தயாராகும் பிரயாக்ராஜ்
இனி எந்த தவறும் நடந்து விடக்கூடாது : வசந்த பஞ்சமிக்கு தயாராகும் பிரயாக்ராஜ்
UPDATED : பிப் 02, 2025 10:02 PM
ADDED : பிப் 02, 2025 09:36 PM

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில், வசந்த பஞ்சமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவர் என்பதால், அசம்பாவிதம் தவிர்க்க உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மவுனி அமாவாசை தினத்தன்று மகா கும்ப மேளாவில் பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் பலியாகினர். இதனால் அரசு நிர்வாகம் தர்ம சங்கடத்துக்கு ஆளாகியுள்ளது. நாளை வசந்த பஞ்சமியை முன்னிட்டு, அதிகப்படியான பேர் வருவர் என்பதால், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்காட்சிப் பகுதியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கூடுதல் காவல் துறை இயக்குநர் பானு பாஸ்கர் மேற்பார்வையிட்டு வருகிறார்.
பக்தர்களுக்கு ஏ.டி.ஜி., பாஸ்கர் கூறியதாவது:
பக்தர்கள், குளித்த பிறகு தயவு செய்து தேவையில்லாமல் படித்துறைகளில் தங்க வேண்டாம். மற்ற பக்தர்கள் புனித நீராடுவதற்காக அந்தப் பகுதியை சுத்தம் செய்யுங்கள். படித்துறைகளில் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, சிற்றுண்டிக்காக நியமிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
படித்துறைகளில் எங்கும் கூட்டம் கூடாமல் இருப்பதையும், பக்தர்கள் குளித்த பிறகு உடனடியாக தங்கள் அடுத்த இடத்திற்குச் செல்வதையும் உறுதி செய்யுமாறு மையத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு பாஸ்கர் கூறினார்.