டிரம்ப் வரி மிரட்டலுக்கு அடி பணிய வேண்டியதில்லை: சசிதரூர்: 'பலர் உண்டு நமக்கு!'
டிரம்ப் வரி மிரட்டலுக்கு அடி பணிய வேண்டியதில்லை: சசிதரூர்: 'பலர் உண்டு நமக்கு!'
UPDATED : ஆக 01, 2025 03:33 PM
ADDED : ஜூலை 31, 2025 11:29 PM

புதுடில்லி : இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக, 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், ''இந்த வரி மிரட்டலுக்கு அடிபணிய வேண்டிய அவசியமே இல்லை,'' என ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார் காங்., - எம்.பி., சசி தரூர்.
''வர்த்தகத்திற்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை; பல நாடுகள் நமக்காக இருக்கின்றன,'' என அவர் கூறியுள்ளார். மேலும், ''எங்கள் நாட்டு அரசு, வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒரு கோமாளியிடம் சிக்கியுள்ளது,'' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிண்டலடித்துள்ளார். 'இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதிக்கப்படும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கும் டிரம்ப் நமக்கு அபராதம் விதித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர் என பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், ''அமெரிக்காவின் இந்த பொருளாதார மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணிய வேண்டிய அவசியமே இல்லை,'' என காங்., - எம்.பி., சசி தரூர் தெளிவா க கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அமெரிக்க அதிபர் டிரம்ப், 25 சதவீத வரியை இந்தியாவுக்கு விதித்திருக்கிறார். தற்போது டிரம்ப், பாகிஸ் தானுக்கு சாதகமாக செயல்பட துவங்கி விட்டார்.
உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிக வரி விதிப்பதாக டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது.
இதனால் வர்த்தக தடை ஏற்படுவதாகவும் அவர் விமர்சிப்பது, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களுக்கு நிச்சயம் பொருந்தாது. ரஷ்யாவுடன் இருக்கும் நீண்டகால நட்புறவை பலவீனப்படுத்தவே, அதிபர் டிரம்ப் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பு என்பது ஆழமான தேச நலனை அடிப்படையாக கொண்டது. குறிப்பாக எரிபொருள் மற்றும் ராணுவ துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது.
இந்த நட்பு என்பது பிற நாடுகளை மிரட்டுவதற்காக அமைந்தது அல்ல. உலகளாவிய அரசியல் விவகாரங்களில் இருந்து இந்தியாவை தள்ளி வைக்க முயல்வது, இந்தியாவின் தன்னாட்சி மற்றும் சுயமாக முடிவெடுக்கும் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவது போல் ஆகும்.
அமெரிக்காவின், 25 சதவீத வரி விதிப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். அதற்காக இந்தியா அடிபணிந்து விடக் கூடாது. அமெரிக்காவின் இந்த வரி உயர்வு, 7.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்திய ஏற்றுமதிக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி துறையில் போட்டியாக இருக்கும் வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளை விட, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி சற்று அதிகமானது தான். இது பாகிஸ்தானுக்கு சாதகம் செய்வது போன்றது.
ரத்தினங்கள், நகை, ஸ்டீல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட இந்திய துறைகளையும் வெகுவாக பாதிக்கவே செய்யும். இதனால் வேலையிழப்பு ஏற்படும். குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளை பாதிக்கும். அமெரிக்காவின் இந்த அழுத்தத்திற்கு பயந்தால் மிகப் பெரிய அளவில் தவறு நிகழலாம். எனவே, இந்தியா தன் வெளியுறவு கொள்கை தொடர்பான உரிமையை எந்த காலத்திலும் விட்டுத் தரக் கூடாது. தேச நலனுக்கு எதிரான விஷயங்களை அடியோடு வேரறுக்கவும் தயங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
அதே போல், ''வெள்ளை மாளிகை கோமாளி,'' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி, அமெரிக்க அதிபர் டிரம்பை கேலி செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இந்திய பொருளாதாரத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்றே இந்த வரி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவின் நேரடி அந்நிய முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எங்கள் நாட்டின் அரசு வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒரு கோமாளியிடம் சிக்கியிருப்பதை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது.
ரஷ்யாவுடன் நாம் வைத்திருக்கும் வர்த்தகத்திற்கு அபராதம் விதிக்கும் வகையிலேயே இந்தியா மீது, 25 சதவீத வரி விதிப்பை டிரம்ப் சுமத்தி இருக்கிறார். இந்தியா சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு. எந்தவொரு மன்னர்கள் முன்பாகவும் அடிமை போல சலாம் போட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.