அரசுகளை கவிழ்க்கும் யோசனை யாருக்கும் வரக்கூடாது: மைசூரு தசராவை துவக்கி இலக்கியவாதி நாகராஜய்யா அறிவுரை
அரசுகளை கவிழ்க்கும் யோசனை யாருக்கும் வரக்கூடாது: மைசூரு தசராவை துவக்கி இலக்கியவாதி நாகராஜய்யா அறிவுரை
ADDED : அக் 04, 2024 12:15 AM
மைசூரு : உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.
விழாவை துவக்கி வைத்த கன்னட இலக்கியவாதி நாகராஜய்யா, ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்கும் யோசனைகள் யாருக்கும் வரக்கூடாது. அரசை கவிழ்ப்பது சுலபம்; மீண்டும் அமைப்பது கடினம்,'' என பேசினார்.
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கும். ஆனால், மழை சரியாக பெய்யாத காரணத்தால், கடந்தாண்டு பாரம்பரியத்துடன் மட்டுமே கொண்டாடப்பட்டது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்தது. மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பின.
இந்நிலையில், வெகு விமரிசையாக தசரா விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படி, சாமுண்டி மலையில் மூத்த கன்னட இலக்கியவாதி ஹம்பா நாகராஜய்யா, சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, 414வது தசரா விழாவை நேற்று துவக்கி வைத்தார்.
பாக்கியம்
பின், அவர் பேசியதாவது:
ஜனநாயகம் தான் மகுடத்தின் மாணிக்கம். கடந்த செப்டம்பர் 15ம் தேதி, பீதர் முதல் சாம்ராஜ்நகர் வரை அரசியல் அமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மனித சங்கிலி அமைத்து ஜனநாயக தினம் கொண்டாடப்பட்டது.
சாமானியனான என்னை வைத்து, உலக பிரசித்தி பெற்ற தசரா விழாவை துவக்கி வைத்திருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். இதன் மூலம், ஜனநாயக நாட்டில், குடிமகன் தான் பிரபு என்பதை வெளிப்படுத்துகிறது. கோவிலுக்குள் வருபவர்கள் அனைவரும் ஆஸ்திகர்களும் அல்ல. கோவிலுக்குள் வராதவர்கள் அனைவரும் நாஸ்திகர்களும் அல்ல.
குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே கொண்டாடும் சில பண்டிகைகள் உள்ளன. ஆனால், தசரா அனைவரும் கொண்டாடும் திருவிழா ஆகும்.
சில விழாக்கள், ஓரிரு நாளில் முடிந்து விடும். ஆனால், தசரா விழாவானது நவராத்திரியின் முதல் நாளில் துவங்கி விஜயதசமி வரை, 10 நாட்கள் நடக்கின்றன.
பால்ய நாட்கள்
மைசூரு உடையார் மன்னர்கள் காலத்தில் கொண்டாடப்பட்ட தசரா விழா, மாநிலம் முழுதும் பிரபலம். அதை நினைக்கும் போது, என் பால்ய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. என் தாய், தசரா விழாவுக்கு அழைத்துச் சென்றது மலரும் நினைவுகளில் ஒன்று. அப்போது எனக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுத்ததை மறக்க முடியாது.
கொலு பொம்மைகள் அலங்கரித்து பெரிய கதைகள் சொல்லப்படும். அரண்மனை, ராஜா, ராணி, கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். தற்போது, நிம்மதி இருந்தால் அந்த வீடே அரண்மனை தான். தசரா விழா வந்தாலே மைசூரு களை கட்டி விடும். ஜம்பு சவாரி உலக அளவில் பிரசித்தி பெற்றது.
தற்போது மக்களாட்சி வந்த பின்னரும், பாரம்பரியம் மாறாமல் தொடர்ந்து தசரா விழா கொண்டாடப்படுகிறது. இதன் மூலம், கர்நாடகாவின் பாரம்பரியம், கலாசாரம் பல தலைமுறைக்கு அழியாமல் இருக்கும். ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவி வலம் வருவது, அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், அணிவகுப்பு ஊர்திகள் ஆகியவை பள்ளி, கல்லுாரிகளில் காண முடியாது.
மல்யுத்த பயில்வான்
புதிய தலைமுறையினர் தசரா விழா குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். தசரா என்றாலே மல்யுத்தம் மிகவும் பிரபலம். கடந்த 1948ல் மாண்டியாவில் நான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது, மல்யுத்த வீரர் மைசூரின் உஸ்தாப் டைகர் ராமு பயில்வான் மிகவும் பிரபலம். அவரை பார்த்து, நானும் மல்யுத்த பயில்வான் ஆக வேண்டும் என்று விரும்பினேன். பயிற்சிக்கு சென்ற போது, எனக்கு இருந்த சுருட்டை தலைமுடியை வெட்டும்படி கூறினார்.
நானும் சுருட்டை முடியை வெட்டி கொண்டு வீட்டுக்கு சென்றேன். அப்போது, என் சித்தப்பா நன்றாக திட்டினார். தந்தை உயிருடன் இருக்கும் போது, மொட்டை அடித்து கொண்டுள்ளாயே என்றார். அதன்பின், மல்யுத்த பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. சாமுண்டீஸ்வரி தேவியிடம் ஆறு கோரிக்கைகளை தீர்த்து வைக்கும்படி வேண்டுகிறேன்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம், ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தி, அப்பாவி மக்கள் இறப்பதை தடுக்கும் வகையில், அந்நாட்டு தலைவர்களுக்கு, மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் உத்வேகம் அளிக்க வேண்டும்
பெண் சிசு கொலைகளை தடுக்க, தாய்மார்களுக்கு நல்ல புத்தி வழங்க வேண்டும்
வேலை வாய்ப்பு பிரச்னையை தீர்த்து வைக்கும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க, உத்வேகம் அளிக்க வேண்டும்
கன்னட மண், மொழி, நீருக்காக போராடுபவர்களை, கொலையாளிகளாக பார்க்காமல், அன்புடன் பார்க்கும் வகையில் ஆட்சி புரிபவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்கும் யோசனைகள் யாருக்கும் வரக்கூடாது. அரசை கவிழ்ப்பது சுலபம்; மீண்டும் அமைப்பது கடினம்
நாள்தோறும் ஊடகங்களில் குற்றச்சம்பவங்கள் குறித்த செய்திகள் அதிகமாக வருவதால், இளைஞர்கள் துாண்டுதலுக்கு உள்ளாகி, அது போன்று செயல்பட யோசிக்கின்றனர். இதை தடுத்து, சமூக நல தகவல்களை வெளியிடும் வகையில், வளமான நாட்டை உருவாக்க உத்வேகம் அளிக்க வேண்டும்.
கர்நாடக மக்களின் பிரதிநிதியாக, 88வது வயதில் தசரா விழாவை துவக்கி வைக்கும் பாக்கியத்தை தந்த சாமுண்டீஸ்வரிக்கு நன்றி.
இவ்வாறு பேசினார்.
குவிந்த மக்கள்
விழாவில், துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் மஹாதேவப்பா, சிவராஜ் தங்கடகி, வெங்கடேஷ், ஹெச்.கே.பாட்டீல், முனியப்பா, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வான ஜி.டி.தேவகவுடா உட்பட பலர் பங்கேற்றனர்.
தசரா விழாவை ஒட்டி, நகர் முழுதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால், நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. மக்கள் ஆங்காங்கே நின்று, மின் விளக்கு அலங்காரத்தை பார்த்து பரவசமடைகின்றனர்.
மலர் கண்காட்சி, பொருட்காட்சி, புத்தக திருவிழா, உணவு திருவிழா, மல்யுத்தம், விளையாட்டு போட்டிகள், திரைப்பட திருவிழா, கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நேற்று துவங்கியதால், மக்கள் குவிந்துள்ளனர்.
மேலும் செய்தி, படங்கள் 7ம் பக்கம்
யதுவீர் நடத்திய
தனியார் தர்பார்
மன்னர் ஆட்சி காலத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்களும், அரண்மனையின் தர்பார் மண்டபத்தில், அப்போதைய மன்னர்கள் தர்பார் நடத்தி வந்தனர். புலவர்களை பாட வைத்து, பொறிகிழி, பரிசுகள் வழங்கினர். தற்போது மக்களாட்சி வந்த பின்னரும், அந்த பாரம்பரியம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.
தற்போதைய உடையார் மன்னர் வம்சத்தின் யதுவீர், நேற்று தனியார் தர்பார் நடத்தினார். இவர் நடத்தும் 10வது ஆண்டு தர்பார் இதுவாகும். வைரம், தங்கம், மாணிக்கம், வெள்ளி என பல விலை உயர்ந்த பொருட்களால், 450 கிலோ எடையிலான ஜோடிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மன்னர் வம்சத்தின் பிரமோதா தேவியை, யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி, மகன் ஆத்யவீர் ஆகியோர் வணங்கினர். அதன் பின், சிம்மாசனத்துக்கு பூஜை செய்து, யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார். அரண்மனையில் இருக்கும் வீட்டில் இருந்து, தர்பார் மண்டபத்துக்கு மன்னர் போன்று உடை அணிந்து வந்தார். மன்னர் காலம் போன்று, அமைச்சர்கள் காவலர்கள், புலவர்கள் உடை அணிந்திருந்தனர்.
...பாக்ஸ்...
'5 ஆண்டு பூர்த்தி செய்வோம்'
விழாவில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
ஆட்சிக்கு வந்தால், கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவோம் என்று தேர்தலின் போது, சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்து விட்டு அறிவிக்கப்பட்டது. அதுபோன்று, ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களிலேயே, கொடுத்த ஐந்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வாக்குறுதி திட்டங்கள் மூலம், சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க செய்துள்ளோம். திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும், ஆண்டுக்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை பெற்று பயனடைகின்றனர். இந்தாண்டு மாநிலம் முழுதும் நல்ல மழை பெய்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
எதிர்பார்ப்பை மீறி விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று சாமுண்டீஸ்வரி தேவியை வேண்டுகிறேன். இதன் மூலம், மக்கள் நிம்மதியுடன் வாழ முடியும். நல்ல மழையால் வெகு விமரிசையாக தசரா விழா கொண்டாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் திருவிழாவாக இருக்க வேண்டுமே தவிர, அதிகாரிகள் திருவிழாவாக இருக்க கூடாது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். மக்கள் ஆதரவால், ஐந்து ஆண்டு காலம் ஆட்சி புரிய வாய்ப்பு தந்தனர். எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும், சாமுண்டீஸ்வரியின் தயவால், ஐந்து ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்வோம். சாமுண்டீஸ்வரி மற்றும் மக்களின் ஆதரவால், 2வது முறை முதல்வராகி உள்ளேன். தவறு செய்திருந்தால், 2வது முறை முதல்வராகி இருக்க முடியாது.
நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைக்கும் நம்பிக்கை உள்ளது. ஆனால், மனசாட்சிப்படி செயல்படுவேன். காந்தி சொன்னது போல், அனைத்து நீதிமன்றங்களை விட மனசாட்சியே பெரியது. ஒருவரை ஒருவர் அன்பால் நேசிக்க வேண்டுமே தவிர, விரோதிக்க கூடாது. அனைத்து மதங்களையும் நேசித்து, மனிதர்களாக வாழ்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
****