காசுக்கு தான் படம் நடிக்கிறார்கள்; அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை சரி என்கிறார் முதல்வர் ரேவந்த் ரெட்டி!
காசுக்கு தான் படம் நடிக்கிறார்கள்; அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை சரி என்கிறார் முதல்வர் ரேவந்த் ரெட்டி!
ADDED : டிச 14, 2024 02:05 PM

புதுடில்லி: சினிமா நட்சத்திரங்கள் காசுக்கு தான் படம் நடிக்கிறார்கள். அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை சரி தான். வழக்கு விசாரணையில் யாரும் தலையிட மாட்டார்கள் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
திரையரங்க நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு, ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை அடுத்து, இன்று (டிச.,14) சஞ்சல்குடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அளித்த பேட்டி:
ஒருவரை ஜெயிலுக்கு அனுப்பியது குறித்து இவ்வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஒரு பெண் தன் உயிரை இழந்து இருக்கிறார். அவரைக் குறித்து நீங்கள் ஒரு துளியும் கவலைப்படவில்லை. அந்தப் பெண்ணின், குடும்பம் எப்படி இருக்கிறது.. அந்த ஏழை பெண்ணின் வாழ்க்கை என்ன ஆனது? என்று எதுவும் கேட்கவில்லை. அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை சரிதான். போலீசார் அவர்களது வேலையை செய்கிறார்கள்.
நடவடிக்கை
அல்லு அர்ஜூன் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்து கொண்டாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. சினிமா நட்சத்திரங்கள் பணம் சம்பாதிப்பதற்காக தான் படம் நடிக்கிறார்கள். சாமானியர்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கின் விசாரணையில் யாரும் தலையிட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பிடித்த தெலுங்கு நடிகர் யார் என்ற கேள்விக்கு, 'நானே ஒரு நட்சத்திரம் தான், நான் யாருடைய ரசிகனும் இல்லை' என ரேவந்த் ரெட்டி பதில் அளித்தார்.

