இந்தியாவின் எந்தபகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக்கூடாது' கர்நாடக நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் ஆட்சேபம்
இந்தியாவின் எந்தபகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக்கூடாது' கர்நாடக நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் ஆட்சேபம்
ADDED : செப் 26, 2024 12:43 AM
புதுடில்லி, 'இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக்கூடாது' என, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்ற விசாரணையின்போது கூறியதற்கு, உச்ச நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வேதவியாசசார் ஸ்ரீசநந்தா, சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது, பெங்களூரின் குறிப்பிட்ட பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி, அதை பாகிஸ்தான் என்று கூறினார். இதுபோல, பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளைக் கூறினார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. உயர் நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தின் கருத்தையும் கேட்டிருந்தது.
இதற்கிடையே, நீதிபதி ஸ்ரீசநந்தா தன் நீதிமன்ற அறையில், தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.
இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:
தற்போது நீதிமன்ற விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. இதனால், நீதிமன்ற விசாரணையின்போது, வழக்கு தொடர்பான கருத்துகளை கூறும்போது, நீதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமூக வலைதளங்கள் தற்போது நீதிமன்ற விசாரணை குறித்தும் செய்தி, தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அவற்றின் விமர்சனத்துக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறும் கருத்துகள், எந்த ஒரு பிரிவினர் அல்லது பாலினத்துக்கும் எதிரானதாகவோ, ஒருதலைபட்சமாகவோ இருக்கக் கூடாது. இதில் கவனம் தேவை. நாட்டின் எந்த ஒரு பகுதியையும் பாகிஸ்தான் என்று எப்படி கூற முடியும்?
தன் கருத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கேட்டுள்ளார். அதனால், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அமர்வு கூறியது.