ADDED : மே 15, 2024 01:24 PM

புவனேஸ்வர்: 'அரசியலமைப்பு சட்டத்தின் கதையை முடித்து விடுவோம் என பா.ஜ., கூறியுள்ளது. எந்த சக்தியாலும் தொட முடியாது' என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
ஒடிசா மாநிலம் பலாங்கீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால், அரசியலமைப்பு சட்டத்தின் கதையை முடித்து விடுவோம் என பா.ஜ., கூறியுள்ளது. எந்த சக்தியாலும் தொட முடியாது. பா.ஜ.,வின் அனைத்துத் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த புத்தகத்தை (அரசியலமைப்புச் சட்டம்) கிழித்து எறிய முயற்சித்தால், மக்களும், காங்கிரஸ் கட்சியும் உங்களை என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.
இடஒதுக்கீடு
மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உரிமைகளை வழங்கியுள்ளது. ஏழைகள், பிற்படுத்தப் பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க காங்கிரஸ் பாடுபடுகிறது. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் அவர்களின் மக்கள் தொகை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பா.ஜ., விரும்புகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.

