சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை; பட்டாசு தடை வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை; பட்டாசு தடை வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
ADDED : நவ 12, 2024 12:23 AM
புதுடில்லி : டில்லியில் தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடிப்பதற்கான தடையை செயல்படுத்தாதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 'மாசு ஏற்படுத்துவதை எந்த மதமும் ஊக்குவிக்காது' என, அமர்வு குறிப்பிட்டுள்ளது.
டில்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சமீபத்தில் நடந்த தீபாவளி பண்டிகையின்போது, டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு மிகவும் அபாயகரமான நிலையில் இருந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் அபய் ஓகா, ஏ.ஜி. மாஷி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:
மாசு இல்லாத சூழலில் வாழ்வது என்பது அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும். எந்த ஒரு மதமும், மாசு ஏற்படுத்துவதை ஊக்குவிக்காது.
டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இந்த தீபாவளியின்போது இந்தளவுக்கு அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.
பட்டாசுகள் வெடிப்பதற்கு அக்., 14ம் தேதிதான் டில்லி அரசு உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. அதற்குள்ளாகவே, பட்டாசுகள் விற்பனை நடந்துள்ளது. ஏன் முன்னதாகவே தடை விதிக்கவில்லை?
லைசென்ஸ் பெற்றவர்கள் விற்பனை செய்வதை நிறுத்துவதில், டில்லி போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த விஷயத்தில் டில்லி போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி பட்டாசு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
இதற்காக டில்லி போலீசில் சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் வாயிலாகவும், டில்லியில் பட்டாசுகள் விற்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடை உத்தரவு முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஆண்டு முழுதும், டில்லியில் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிப்பதை, டில்லி அரசு உறுதி செய்ய வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, வரும் 25ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். டில்லியை ஒட்டியுள்ள மாநிலங்களும், இதுபோன்று பட்டாசுகளை சேமித்து வைப்பது, விற்பதற்கு, வெடிப்பதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியது.

